அரிசி வாங்கி ரூ.63.77 லட்சம் மோசடி செய்தவர் கைது

கோவை,செப்.11:கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள போலீஸ் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் கோகுல் யாதவ் (45). மொத்த அரிசி வியாபாரி.இவரிடம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவர் தம்பி ரமேஷ்குமார் (32) ஆகியோர், ரூ. 63.77 லட்சத்திற்கு அரிசி வாங்கினர். இதனை தொடர்ந்து பல மாதமாக அவர்கள் அரிசி வாங்கியதற்கான தொகையை தரவில்லை.  இந்நிலையில், அவருக்கு சுரேஷ்குமார் 55 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். இந்த காசோலையில் கையெழுத்து குளறுபடியாக இருப்பதாக கூறி வங்கி நிர்வாகத்தினர் பணம் தர மறுத்து விட்டனர். மீண்டும் ஒரு காசோலையை சுரேஷ்குமார் கொடுத்தார். அதில் பணம் எடுக்க முயன்றபோது சுரேஷ்குமாரின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது.இதுதொடர்பாக கோகுல் யாதவ் சுரேஷ்குமார், ரமேஷ்குமாரிடம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் சுரேஷ்குமாரை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் கைது செய்தார். ரமேஷ்குமாரை தேடி வருகிறார்.

Related Stories: