மிளகாய் பொடி துாவி பொள்ளாச்சி வியாபாரியிடம் ரூ.14 லட்சம் வழிப்பறி

பாலக்காடு,செப்.11: பொள்ளாச்சி காய்கறி வியபாரியிடம் பாலக்காடு அருகே ரூ.14 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி கோட்டாம்பட்டி கேஆர்ஜிபி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ்(47). இவர் பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட், காய்கறி மண்டிகளில் இருந்து காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி, கேரள மாநிலம் பட்டாம்பி, மலப்புரம் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த ஐயப்பராஜ்(40) என்பவருடன் காரில் கேரளா சென்றார். காரை ஐயப்பராஜ் ஓட்டி சென்றார்.

இவர்கள் காய்கறிகளுக்கான பணத்தை வியாபாரிகளிடம் வசூலித்து கொண்டு பொள்ளாச்சி புறப்பட்டனர். பாலக்காடு அருகே கல்லேக்காடு பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது, பின்னால் வந்த ஒரு கார் புஷ்பராஜின் காரை உரசி நின்றது. இதனால் புஷ்பராஜ் மற்றும் ஐயப்பராஜ் ஆகியோர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்த போது, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிவந்த 4 பேர் மிளகாய் பொடியை இருவர் மீதும் வீசிவிட்டு, காரில் இருந்த பேக்கை தூக்கி கொண்டு தப்பினர். இந்த வழிப்பறி குறித்து பாலக்காடு வடக்கு போலீசில் புஷ்பராஜ் புகார் செய்தார். அதில் காய்கறி விற்று வசூல் செய்த பணம் ரூ.14 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: