மேரக்காய் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி, செப்.11:நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக  மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை மற்றும் மலை  காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், பெரும்பாலான விவசாயிகள்  மாற்றுத் தொழிலான மலர் சாகுபடிக்கு மாறினர். ஆனால், அதுவும் பயன்  அளிக்காமல் போனது. மேலும், மலை காய்கறிகளுக்கும் நிரந்த விலை  கிடைப்பதில்லை. சில சமயங்களில் உச்சத்தை தொடும் மலை காய்கறிகளின் விலை, சில  சமயங்களில் பல மாதங்களுக்கு மிகவும் அதாள பள்ளத்திற்கு சென்று விடுகிறது.  இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், பராமரிப்பு  செலவும் இதற்கு அதிகம். இந்நிலையில், பெரும்பாலான விவசாயிகள் மூலதன செலவு  மற்றும் பராமரிப்பு குறைந்த மேரக்காய் விவசாயத்திற்கு தற்போது  மாறிவிட்டனர்.

Advertising
Advertising

ஒரு முறை இந்த மேரக்காய் கொடிகளை நடவு செய்தால், குறைந்தது 6  மாதங்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது. மேலும், முதலீட்டிற்கு பங்கம்  ஏற்படாத வகையில் போதுமான விலை கிடைத்து வருகிறது. குறிப்பாக, வன  விலங்குகள், குருவிகள், பன்றிகள் மற்றும் குரங்குகளிடம் இருந்த இந்த  மேரக்காய் கொடிகளை எளிதாக பாதுகாக்க முடிகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில்  பயிரிட்டால், நாள் தோறும் அறுவடை செய்து வருவாய் பார்க்க முடிகிறது. மேலும்  இந்த மேரக்காய் செடிகளை பராமரிக்க தொழிலாளர்கள் அதிகளவு தேவையில்லை.  இதனால், பெரும்பாலான விவசாயிகள் தற்போது தேயிலை மற்றும் மலை காய்கறி  விவசாயத்தை தவிர்த்து மேரக்காய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த  காலங்களில் மலை காய்கறிகள் மட்டுமே பயிரிட்டு வந்த பல இடங்கள் தற்போது  மேரக்காய் தோட்டங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, கொலக்கொம்பை, சேலாஸ்,  மஞ்சூர், காட்டேரி, எப்பநாடு, நெல்லி மந்து போன்ற பகுதிகளில் தற்போது  ஏராளமான விவசாயிகள் மேரக்காய் பயிரிட்டு வருகின்றனர்.

Related Stories: