பார்சன்ஸ்வேலி குழாயில் உடைப்பு இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை ரத்து

ஊட்டி,செப்.11: ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரு நாள் தண்ணீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கு பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், கோரிசோலா, கிளன்ராக், தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோயர், ஓல்டு ஊட்டி, மார்லிமந்து ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து இரு ராட்சத மோட்டார் பயன்படுத்தி ஊட்டி நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும், இங்கிருந்து வெலிங்டன் ராணுவ மையத்திற்கும் குடிநீர் குழாய்களின் மூலம் கொண்டுச் செல்லப்படுகிறது.
Advertising
Advertising

ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணை நீர் சுமார் 25 கி.மீ தொலைவு குழாய்கள் மூலம் பயணித்த பின்னரே நகருக்குள் வருகிறது. தற்போது இரு நாட்கள் முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பார்்சன்ஸ்வேலி அணையில் இருந்து ஊட்டி நகருக்கு வரும் வழியில், இந்த குழாய்களில் அடிக்கடி விரிசல் மற்றும் உடைப்பு ஏற்பட்டு பழுதடைந்தால், அதனை சீரமைக்கும் வரை தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படுவது வழக்கம். சில சமயங்களில் ஒரு வாரம் ஆகிவிடும். தற்போது பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து ஊட்டி வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை சீரமைக்க 2 நாட்கள் ஆகும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஊட்டி நகருக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி கூறுகையில்: பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து ஊட்டி நகருக்கு தண்ணீர் கொண்டு வரும் முக்கிய குழாயில் தீட்டுக்கல் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (இன்று) சீரமைப்பு பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். அதுவரை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். விரைவாகவே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: