சத்தியநாதபுரத்தில் சாயும் நிலையில் மின்கம்பம்அசம்பாவிதம் முன் அகற்றப்படுமா?

ஒட்டன்சத்திரம், செப். 11: அத்திக்கோம்பை அருகே சத்தியநாதபுரத்தில் சேதமடைந்து சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புது மின்கம்பம் வைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பை ஊராட்சிக்குட்பட்டது சத்தியநாதபுரம். 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிறிஸ்துவ ஆலயம் முதல் தெருவில் உள்ள மின்கம்பம் தூர்பகுதியில் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் மின்கம்பம் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து சத்தியநாதபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் கூறுகையில், ‘‘சத்தியநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு அதிகளவில் பொதுமக்கள் பிரார்த்தனைக்கு வந்து செல்பவர். மேலும் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த மின்கம்பம் வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள எந்த வீட்டிலாவது மின்விநியோகத்தில் குறைபாடு ஏற்பட்டால் இந்த மின்கம்பத்தில் ஏறி தான் பார்க்க வேண்டும். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்தை கண்டு ஏற மறுக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் ஒட்டன்சத்திரம் மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: