வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள் ...மாற்றுத்தொழிலுக்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?

பட்டிவீரன்பட்டி, செப். 11: போதிய மழை இல்லாததால் பட்டிவீரன்பட்டி பகுதியில் காய்ந்து வரும் தென்னை மரங்களை வெட்டி விற்று வருகின்றனர். வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளின் மாற்றுத்தொழிலுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, ஆத்தூர், நரசிங்கபுரம், சேவுகம்பட்டி, அய்யன்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் தென்னையை நம்பி மட்டும் விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இபப்குதியில் பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் தென்னை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. கிணற்று பாசனம், போர்வெல்லிலும் தண்ணீர் வறண்டு விட்டதால் விவசாயிகள் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர்.இதனால் தென்னை விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். மேலும் தென்னையில் இருந்து கயிறு தயாரித்தல், கிடுகு பின்னுதல், வீடு கூட்டும் துடைப்பான்கள், தென்னம்பாலை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களின் வருமானம் பாதியாக குறைந்துள்ளது.
Advertising
Advertising

இப்பகுதி தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘‘பட்டிவீரன்பட்டி பகுதியில் தொடர்ந்து பருவமழை பொய்த்து வருகிறது. வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்வதில்லை. ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் வெயில்போல் தற்போது அதிகமாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் ஏற்கனவே அதலபாதாளத்தில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிவடைந்து வருகிறது. ஆயிரம் அடிவரை போர்வெல் அமைத்தும் சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. பொதுவாக தென்னை மரங்களுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் விட்டு வர வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறி விட்டனர். ஆனால் இந்த சொட்டுநீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இதனால் தென்னை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. மரங்கள் வெயிலில் காய்ந்து விட்டால் விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் கிடைக்கும் குறைவான விலைக்கு மரங்களை வெட்டி விற்று வருகிறோம். இவை மின்சாரம் தயாரிப்பு, கட்டுமானத்தில் பலகை தயாரிப்பு, செங்கல் உற்பத்தி உள்ளிட்ட இடங்களுக்கு விற்கப்படுகின்றன. தென்னை மரங்களை வேரோடு எடுக்க அதிக செலவாகும். இதனால் மாற்று விவசாயத்திற்கும் இந்த நிலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் மேலாக பிள்ளைகள் போல்வளர்த்த தென்னை மரங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய்களை பறித்து ஆயிரக்கணக்கில் வருமானம் பெற்று வந்தோம். ஆனால் இன்று தண்ணீர் இல்லாததால்அவற்றை வெட்டி தரத்திற்கு ஏற்றவாறு ரூ.200 முதல் ரூ.600க்கு விற்று வருகிறோம். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு மாற்றுத்தொழில் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: