2 முக்கிய சாலைகளுக்கு கலைஞர் பெயர்

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சட்டசபை கேபினட் அறையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனி குமார், நிதி செயலர் கந்தவேலு, வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

 தற்போது நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 27 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில்  உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ்காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம். அதேபோல காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும், அங்குள்ள பட்ட மேற்படிப்பு மையத்திற்கும்  டாக்டர் கலைஞர் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம். மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி வருகிறோம்.  
Advertising
Advertising

 புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் மழை காலத்திற்கு முன்பே ஏரி குளங்களை தூர்வாரி, அதன்மூலம் கிடைக்கும் மணலை மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாட்டு வண்டிக்கு ரூ.50ம், டிராக்டருக்கு ரூ.100ம், லாரிக்கு ரூ.150ம் வசூலிக்கப்படும். அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் இந்த தொகையை வசூல் செய்யும்.

ஏனாம் பகுதியில்   சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதிப்பு உண்டானது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடைக்கால நிவாரணமாக தலா ரூ.3000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.சின்னையாபுரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் அந்த இடத்தை ஏழைமக்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு தற்போது இடத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஏழைகள் வாங்கும் விதத்தில் அந்த இடத்தை குறைந்த மதிப்பில் வாங்க அரசு நடவடிக்கைஎடுக்கும். இதுகுறித்த இறுதி முடிவு அடுத்த அமைச்சரவையில் எடுக்கப்படும். காமராஜர் வீடுகட்டும் திட்டத்தில் 32500 பேர் நிதி பெற்றுள்ளனர். அதில் 28,800 பேர் வீடு கட்டி முடித்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி முடிக்காமல் உள்ளனர். வீடுகளை கட்டாதவர்கள் அரசு வழங்கிய தொகையை திருப்பி செலுத்தலாம். அதில் கூடுதலாக ரூ.3 ஆயிரம் செலுத்தினால் போதும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

Related Stories: