திருமண மண்டப கழிவுநீரால் சுகாதார சீர்கேடு’

வில்லியனூர், செப். 11:  வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் கவர்னர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வில்லியனூர் நகர பகுதியில் திருமண மண்டபத்திற்கு கிராக்கி ஏற்பட்டதால் சில அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆங்காங்கே புதிய திருமண மண்டபங்களை கட்டியுள்ளனர். தற்போது வில்லியனூர் நகரபகுதியில் 12 திருமண மண்டபங்களும் பைபாஸ் சாலையில் 6 திருமண மண்டபங்களும் உள்ளன.இவற்றில் ஆரியப்பாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை திறந்த வௌியில் விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கழிவுநீர் குட்டையாக தேங்கி சகதி போன்று இருப்பதால் பன்றிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. மேலும் மண்டபத்தில் கட்டப்படும் வாழை மரங்கள், ஐஸ்கிரீம் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் அனைத்து குப்பைகளையும் இந்த கழிவுநீர் குட்டையை சுற்றி போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மண்டபத்தின் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு தொற்று நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் காற்று மாசுபடுகிறது. எனவே வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்

பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் மண்டபங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: