இழப்பீடு வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் மனு அளிப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி, செப். 11:     கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கச்சிராயபாளையம், கரடிசித்தூர், வடக்கநந்தல், கள்ளக்குறிச்சி தெற்கு, மேற்கு, மூரார்பாளையம், தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதியில் ள 213 கிராமங்கள் உள்ளது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்துள்ளனர். அதில் ஒரு ஏக்கர் கரும்புக்கு ரூ.1472 வீதம் காப்பீடு தொகையை விவசாயிகள் செலுத்தியுள்ளனர். ஆனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போதிய மழையில்லாததால் கரும்பு பயிர்கள் முழுமையாக கருகிய நிலையில் உள்ளது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.    பின்னர் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோட்டாட்சியர் தினேஷிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்ெகாண்ட கோட்டாட்சியர், ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: