பெட்ரோல் விலையை குறைக்க கோரி குடந்தையில் இந்து மக்கள் கட்சியினர் நூதன வழிபாடு

கும்பகோணம், செப்.11: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற கோரி இந்த மக்கள் கட்சியினர் பெட்ரோலை விநாயகர் முன் வைத்து நேற்று வழிபட்டனர்.இந்து மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரம்புக்கள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர வேண்டும். எத்தனால் மற்றும் மூலிகை கலந்த பெட்ரோல் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். எலக்ட்ரானிக் பேட்டரி கார் விற்பனைக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை மத்திய அரசிடம் முறையிடுவது வீணானது.

அதனால் விநாயகரிடம் முறையிட்டாலாவது கோரிக்கை நிறைவேறும் என கருதி கும்பகோணம் மடத்து தெருவில் விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரிடம் பெட்ரோல் கேனுடன் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமுர்த்தி தலைமையில் அக்கட்சியினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் லோக.செல்வம், மாவட்ட தலைவர் ராஜ்குமார், நகர பொது செயலாளர் பூக்கடை பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: