குறட்டை (SNORING)

நன்றி குங்குமம் தோழி

ஆயுர்வேத மருத்துவ நிபுணர் சிவகுமார்

சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் மாரியப்பன் என்னும் ஒரு முதியவர் தன்னுடைய குறட்டைப் பழக்கத்தினால் என் குடும்ப உறுப்பினர்களின் தூக்கம் கெடுவதாகவும், அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார். குறட்டை ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இக்குறட்டையை காரணம் காட்டி  பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெறும் நிகழ்வுகள் உண்டு.

இதற்கு மருத்துவத்தில் வைத்தியம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், அவருக்கு சில பஞ்சகர்ம மருத்துவங்கள் மூலமும் உள் மருந்துகள் மூலமும் இவ்வியாதியை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்று தைரியம் கூறி அம்மருந்துகளையும் கொடுத்து அனுப்பிவைத்தேன். அவரும் சுமார் பத்து நாட்கள் நமது மருத்துவமனைக்கு தினமும் வந்து பஞ்சகர்ம சிகிச்சைகள் செய்து கொண்டு ஒரு மூன்று மாத காலம் உள்மருந்துகளும் சாப்பிட்டு இவ்வியாதியிலிருந்து பெரிதும் மீண்டுவிட்டதாக சமீபத்தில் என்னை மீண்டும் சந்தித்து மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார்.

நம் மாரியப்பனைப்போல் பலரும் இந்த குறட்டையினால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கானது இந்த தகவல். கிட்டத்தட்ட அனைவரும் அவ்வப்போது குறட்டை விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இதுவொரு, நாள்பட்ட பிரச்சனையாகவோ,  சில சமயங்களில் இது ஒரு தீவிர உடல்நிலையாகவும் இருக்கலாம்.  கூடுதலாக, குறட்டை உங்களைச் சார்ந்தவர்களுக்கும் கூட ஒரு பெரும் தொல்லையாக இருக்கலாம்.

சத்தம் எப்படி ஏற்படுகிறது நாம் சுவாசிக்கும் காற்றானது  மூக்கு, வாய், தொண்டை மூலமாக  மூச்சுக்குழல்  வழியாக நுரையீரலை சேர்கிறது. இந்த பாதையில் எங்காவது தடை ஏற்பட்டால் குறட்டை சத்தம் ஏற்படும். இது உங்கள் தொண்டையில் உள்ள தளர்வான திசுக்களை கடந்து காற்று பாயும் போது ஏற்படும் கரகரப்பான அல்லது கடுமையான ஒலியாகும், இதனால் நீங்கள் சுவாசிக்கும்போது திசுக்கள் அதிர்வுறும்.

தூக்கம் நம் உடலுக்கும் மூளைக்கும் மிகவும் தேவையான ஒன்று. குறட்டை விடும் மனிதர்கள் நன்கு உறங்குகின்றார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இது ஆரோக்கியமான தூக்கம் கிடையாது.

ஏன் தூங்கும்போது மட்டும் வருகிறது

நாம் தூங்கும்போது நம் தொண்டைத்தசையானது தளர்வு அடையும். அப்போது மூச்சுப்பாதையின் அளவு குறைகின்றது அந்த குறுகிய பாதையில் செல்லும் சுவாச காற்றானது குறட்டைசத்தமாக வெளிப்படுகிறது.

மேலும் நாம் மல்லாந்து படுக்கும்போது தளர்வு நிலையில் உள்ள நம் நாக்கு சற்று தொண்டைக்குள் இறங்கிவிடும் .இதனால் மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை சத்தம் உருவாகும்.

காரணங்கள்

*மனிதனாக இருப்பதே குறட்டை வருவதற்கு காரணமாக அமையும்.

*பெண்களை விட ஆண்களுக்கு குறட்டை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

*பருமனாக இருத்தல்.  அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்கள் குறட்டை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

*மது அருந்துதல். ஆல்கஹால் உங்கள் தொண்டை தசைகளை தளர்த்துகிறது, குறட்டை அபாயத்தை அதிகரிக்கிறது.

மற்ற காரணங்கள்

*தூக்கத்தில் ஏற்படும் சுவாச கோளாறுகள்

*மரபு வழி

*ஒவ்வாமை

*உடல் பருமன்

*சளி

*மூக்கு அடைப்பு

*தூக்கமின்மை

*மூக்கு இடைச்சுவர் வளைவு  (Deviated Nasal Septum)

*குறுகிய காற்றுப்பாதை கொண்டவர்கள்.  

*சைனஸ் தொல்லை

*டான்சில் வளர்ச்சி

*தைராய்டு உள்ளவர்கள்

*குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

*புகைபிடித்தல்

*மது அருந்துதல்

*அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வது.

குறட்டை என்பது OSA (Obstructive Sleep Apnea) என்னும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோயின் அறிகுறியாக  உள்ளது. குறட்டையானது பெரும்பாலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் (obstructive Sleep Apnea) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். அனைத்து நோயாளிகளுக்கும் OSA இல்லை, ஆனால் குறட்டையானது பின்வரும் அறிகுறிகளுடன் இருந்தால், OSAவாக இருக்கலாம். அதனால் தக்க மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

* உறக்கத்தின் போது திடீர் மூச்சு முட்டுவது,

* அதிக பகல் தூக்கம்

* கவனம் செலுத்துவதில் சிரமம்

* காலை தலைவலி

* எழுந்தவுடன் தொண்டை வலி

* அமைதியற்ற தூக்கம்

* இரவில் மூச்சுத்திணறல்

* உயர் ரத்த அழுத்தம்.

* இரவில் நெஞ்சு வலி

* அடிக்கடி விரக்தி அல்லது கோபம்

* கவனம் செலுத்துவதில் சிரமம்

* தூக்கமின்மையால் மோட்டார் வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்.

* குழந்தைகளில், மோசமான கவனம், நடத்தை பிரச்சினைகள் அல்லது பள்ளியில் மோசமான செயல்திறன்.

ஓஎஸ்ஏ பெரும்பாலும் உரத்த குறட்டையாக இருக்கும். இடையில் சுவாசம் திடீரென தடைபடும்போது நோயாளி திடுக்கிட்டு மூச்சுத்திணறி எழுந்திரிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். தூக்கமின்மை காரணமாக நோயாளி ஆழ்ந்த உறக்கத்தினை அடைய சிரமப்படுவார்.  இந்த சுவாச இடை நிறுத்தங்கள் இரவில் பல முறை மீண்டும் மீண்டும் வரலாம்.

நோய் கண்டறிதல் நோயாளியின் உடலில் எலெக்ட்ரோடுகளைப் பொருத்தி, அதன் மூலம் அவரது மூளை அலைச் செயல்பாடு (Brain waves), இதயத்துடிப்பு (Heart rate), மூச்சின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை பார்க்க வேண்டும். இதனோடு கண்கள், கால்களின் இயக்கம் ஆகியவையும் ஆய்வுசெய்ய வேண்டும். இந்த ஆய்வுக்கு, `தூக்க ஆய்வு’ (Sleep study) என்று பெயர்.தூக்கத்தை ஆய்வு செய்வதற்கான `பாலிசோமோனோகிராபி’ (Polysomnography) என்ற நவீன கருவி உள்ளது.

சிகிச்சை

குறட்டை ஆயுர்வேதத்தில், ஊர்துவஜட்ருகாத ரோகம் எனப்படும் தோள்பட்டைக்கு மேல் வரக்கூடிய நோயாக கருதப்படுகிறது. இது பிராண, உதான வாத இயக்கங்களின் தடையினால் ஏற்படும் நோயாக பார்க்கப்படுகின்றது.

பஞ்சகர்மா முறைகளான அபியங்கம்

(massage), உத்சாதனம்( massage with powders, வமனம் (Therapeutic Emesis), வஸ்தி (enema), நஸ்யம் (inhalation therapy), கண்டூஷம் மற்றும் கவலகிரகம் (Oil Pulling), தூமபானம் மற்றும் க்ஷீரதூமம் (Herbal Smokes) ஆகியவை தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள நல்ல பலனளிக்கும்.   

மேலும் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருந்துகளாகிய புனர்நவாதி கஷாயம், லட்சுமி விலாஸ் ரஸ், நெருஞ்சில் சூரணம், கோதந்தி பஸ்மா, சுதர்ஷன் கன வட்டி, சுவாச குடார ரஸம், ஹிங்குவாஸ்டக சூரணம், பிரம்மி நெய், சுவாசனந்த குளிகா, தாளீசபத்ராதி சூர்ணம் ஆகியவை தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள நல்ல பலனளிக்கும்.   தவிர்க்க வேண்டியவை  தூங்கச் செல்வதற்கு முன்னர் துரித உணவுகள், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

சளி, மூக்கடைப்பு தொந்தரவு

இருந்தால், தூங்கச் செல்வதற்கு முன்னர் சுடுநீரில் ஆவிபிடிப்பது நல்லது. இது மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள தற்காலிக அடைப்பை நீக்கி, காற்று எளிதாகச் செல்ல வழிவகுக்கும். உயரமான தலையணையை (கழுத்து வலி ஏற்படாதவாறு) தலைக்கு வைத்துப் படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

1. எடை குறைத்தல்

படிப்படியாக  எடை அதிகரிப்பது குறட்டைக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் கழுத்தில் உள்ள கொழுப்பு திசுக்கள் தூக்கத்தின் போது காற்று சுதந்திரமாக உள்ளே மற்றும் வெளியே வருவதை தடுக்கிறது. எடை அதிகரிப்பு உங்கள் தொண்டை மற்றும் கழுத்துப் பகுதியை பருமனாக்கி அதன் மூலம் மேல் சுவாசப் பாதையில் சுருக்கத்தை உருவாக்குகிறது. அதனால் சிறந்த எடையை பராமரிக்க முயற்சிக்கவும். தினமும் 30 நிமிடம்உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுமுறை மாற்றங்களைச் செய்து, காய்கறிகள் மற்றும் பழங்களின் 5 பகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும் (ஒரு பகுதி ஒரு கைப்பிடிக்கு சமம்).

2. மது அருந்துவதை தவிர்த்தல்

மது அருந்துவது, தூக்கத்தின் போது குறட்டையை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது, ஏனெனில் இது தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களின் தளர்வு மற்றும் சுவாசத்தின் போது ஏற்படும் இடையூறுகளை ஏற்படுத்தும்.

3. புகைப்பதை நிறுத்தல்

புகைபிடித்தல் தொண்டையின் உள் புறத்தில் கடுமையான எரிச்சலுடன் வீக்கம் மற்றும் கண்புரைக்கு வழிவகுக்கும்.மேலும் மேற்கூறிய அனைத்து காரணங்களையும் தவிர்த்தாலே இந்நோயை முற்றிலுமாக தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் சிறந்த வழியாக அமையும்.

தொகுப்பு : உஷா நாராயணன்

Related Stories: