ஆட்டோ ஓரம் அமர்ந்தவனுக்கு நேர்ந்த சோகம் தனியார் பஸ் உரசியதில் 1ம் வகுப்பு மாணவன் சாவு

சென்னை: கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் சிறுவன் வெற்றி, பள்ளிக்கு ஆட்டோ மூலம் செல்வது வழக்கம்.  நேற்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு ஆட்டோவில் புறப்பட்டான். காத்தான்கடை பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ், ஆட்டோ மீது உரசியபடி சென்றது.

இதில் ஆட்டோவின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த மாணவன் வெற்றியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. உடனடியாக அவனை கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் வெற்றியை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்படி கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: