பங்கு சந்தை மோசடியில் சிக்கி சிறைக்கு சென்றவர் மதுரவாயலில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிப்பு

சென்னை: மதுரவாயலில் காரில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் மீட்கப்பட்டார்.  இந்த கடத்தல் சம்பவம் நாடகம் என்று சந்தேகம் எழுவதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லியை சேர்ந்தவர் கணேஷ் (35). பங்குச்சந்தை ஆலோசகரான இவர் வளசரவாக்கத்தில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல கால் டாக்சியில் வந்து கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ஆலப்பாக்கம் அருகே வந்த போது ஒரு கார் கணேஷ் சென்ற காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் காரில் இருந்த கணேசை அவர்களது காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில், பெங்களூரில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வந்த கணேஷ் அங்கு மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்னைக்கு வரும்போதுதான் கடத்தப்பட்டுள்ளார். எனவே, அதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கூலிப்படையை வைத்து கணேசை கடத்தினார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கணேஷ் திருப்பூர் அருகே  அவிநாசியில் இருப்பதாகவும், கடத்தி வந்தவர்கள் ஆள் மாற்றி கடத்தி விட்டதாகவும் கூறி இறக்கி விட்டதாக தனது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி  மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ் வீடு திரும்பினார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடத்தியவர்கள் யார்? ஏன் பாதியில் இறக்கி விட்டனர். உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் நாடகம் ஆடுகிறாரா? என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: