பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் காங்கிரஸ், திமுகவினர் கைது: காவல் நிலையம் முற்றுகை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ், திமுகவினரை கைது செய்த போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்தவர்களை திருமண மண்டபத்தில் அடைக்காமல், காவல் நிலையத்தில் வைத்ததால் உதவி ஆணையரிடம் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் நேற்று ‘பாரத் பந்த்’ நடந்தது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆதரவளித்தன.
Advertising
Advertising

கால் டாக்சி, லாரி மற்றும் ஆட்டோக்களும் ஓடாது என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு, மறியல், போராட்டம் என நடந்தது.

சென்னையில், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் நேற்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை மூடும்படி கூறியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் தண்டையார்பேட்டை போலீசார் சென்று அவர்களை கைது செய்தனர். கைது விவரம் தெரியவந்ததும் காங்கிரஸ், திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர்  தண்டையார்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் திமுக பகுதி செயலாளர் மருதுகணேஷ், ‘‘கைது செய்தவர்களை திருமண மண்டபத்தில்தான் வைப்பீர்கள்.

காவல்நிலையத்துக்கு எதற்காக கொண்டு வந்தீர்கள்’’ என வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் முத்துக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் 3 மணிக்கு விடுவித்தனர்.  காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீனவ மக்கள் முன்னணி தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இதில் ஆர்ப்பாட்டம் செய்த 30க்கும் மேற்பட்டவர்களை காசிமேடு போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

*திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கிழக்கு பகுதி திமுக செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில், நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், பரமானந்தம், ஆர்.எஸ்.சம்பத், ஆசைத்தம்பி, இளவரசன், ஆதிகுருசாமி உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகள் குறித்து விளக்கி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினர். அப்போது, விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜ அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

* பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட மத்திய காங்கிரஸ் மணலி பகுதி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மணலி பஜார் தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அம்பத்தூர் மகீந்திரன் தலைமை வகித்தார். கேபிபி சாமி எம்எல்ஏ, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.விஆறுமுகம், துரை மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கீர்த்தி, வெங்கடேசன், செல்லா, அருணாசலம், மதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

*ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், நங்கநல்லூரில் நடந்தது. ஆலந்தூர் தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், எஸ்டிபிஐ ஆலந்தூர் தலைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சபீக் அகமது, கே.கடும்பாடி, தில்தார் பாஷா, கே.நாகராஜ், மணிவண்ணன், அன்னப்பழம் சரவணன், சந்திரசேகர், உசேன், திமுக சார்பில் கே.ஆர்.ஜெகதீஷ்வரன், முன்னாள் கவுன்சிலர் முத்து, ஜெயராம் மார்த்தாண்டன், ஏசுதாஸ், நடராஜன், அபிஷேக் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

*ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பரங்கிமலை பட்ரோட்டில் நடந்தது. ஆலந்தூர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.செந்தில் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கண்டோன்மென்ட் நகர தலைவர் பொன் சிவசெல்வம், மாநில செயலாளர்கள் ஜோஷ்வா ஜெரால்டு, நரேஷ் எஸ்.சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.ஜாபர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நித்யா உமாபதி, தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆன்ட்டோ, நகர நிர்வாகிகள் ஆர்.ரகுநாதன், சுந்தர்ராஜ், சந்திரசேகர், ஜெயவேலு, ஜெயராமன், புஷ்பகுமார், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெண்கள் ஒப்பாரி  வைத்து ஆர்ப்பாட்டம்  

தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதிகளில் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தேவா அருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், மனித நேய மக்கள் கட்சினர் உட்பட ஏராளமான தோழமை கட்சினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விறகு அடுப்பு வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தும், தள்ளுவண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி ஊர்வலமாக சென்றும், மாட்டுவண்டியில் சென்றும் நூதனமுறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புறநகரில் கடையடைப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, நேற்று நடந்த பாரத் பந்த்திற்கு தமிழகத்தில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதிகளில் நடைபாதை கடைகள் உட்பட சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது. பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டதால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல், புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை பகுதிகளில் முக்கிய சாலைகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் பெரும்பாலனவை மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் திறந்து இருந்தன.

Related Stories: