போலி ‘பேடிஎம்’ மூலம் 3 லட்சம் நூதன மோசடி: கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது

சென்னை: போலி ‘பேடிஎம்’ ஆப் மூலம் பல்பொருள் அங்காடியில் 3 லட்சத்துக்கு பொருட்களை வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம், குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (49). இவர், அதே பகுதி பிரதான சாலையில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இங்கு, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த ‘பேடிஎம்’ வசதி உள்ளது. இந்நிலையில், துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் கிஷன் (19), ஸ்டேன்லி (19) உள்பட 9 மாணவர்கள், கடந்த 3 மாதங்களாக சரவணன் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, ‘பேடிஎம்’ மூலம் பணம் செலுத்தினர். ஆனால், இதற்கான பணம் கடைக்காரரின் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை.

Advertising
Advertising

இதுபற்றி, அந்த மாணவர்களிடம் கேட்டபோது, ‘‘எங்களது வங்கி கணக்கில் உள்ள பணம், உங்கள் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் ஆக சிறிது தாமதம் ஆகும். பயப்பட வேண்டாம்,’’ என்றனர். மாணவர்களும் விலை உயர்ந்த பொருட்களை அதிகளவில் வாங்கியதால், கடைக்காரர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதை பயன்படுத்தி மாணவர்களும் கடந்த மூன்று மாதங்களில் 3 லட்சத்திற்கு மேல் பொருட்களை வாங்கியுள்ளனர். ஆனால், அதற்கான பணம் மட்டும் கடைக்காரரின் வங்கி கணக்கிற்கு வரவில்லை. இந்நிலையில், கிஷன், ஸ்டேன்லி உள்ளிட்ட 4 மாணவர்கள் நேற்று முன்தினம் கடைக்கு வந்து ‘பேடிஎம்’ மூலம் பொருட்களை வாங்க முயன்றனர். சந்தேகமடைந்த கடைக்காரர், ஊழியர்கள் துணையுடன் அவர்களை பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார், இதில் தொடர்புடைய மேலும் 5 பேர் உள்பட மொத்தம் 9 மாணவர்களையும் பிடித்து விசாரித்தபோது, போலி ‘பேடிஎம்’ ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, பிடிபட்ட மாணவர்கள் போலி ‘பேடிஎம்’ ஆப் மூலம் வேறு எங்கேனும் ேமாசடியில் ஈடுபட்டனரா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: