தேங்காய் பறித்ததில் தகராறு முதியவர் அடித்து கொலை

சென்னை: பெரியபாளையம் அருகே முதியவரை அடித்து கொன்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி அகரம்  பகுதியில் வசித்து வந்தவர் காசிரெட்டி  (65). விவசாயி.   அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செல்வம் (47).  காசிரெட்டி நேற்று முன்தினம் இரவு பெட்டி கடைக்கு  சென்று செல்வத்திடம், ‘‘உனது தம்பி மகன் யுவராஜ் என்னுடைய தோட்டத்தில் தேங்காய் பறித்து வந்து விட்டான். கண்டித்து வையுங்கள்’’ என கூறியுள்ளார். இதை கேட்ட செல்வம், ‘‘இனி இது போல் நடக்காது’’ என காசிரெட்டியிடம் கூறியுள்ளார். ஆனாலும், காசிரெட்டி சமாதானம் அடையவில்லை. தொடர்ந்து இருவருக்கும் கடும்   வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

அப்போது, செல்வம் அருகில் இருந்த கட்டையை எடுத்து காசிரெட்டியின் தலையில்  அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்த காசிரெட்டி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட செல்வம், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து காசிரெட்டியின்  உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர்.  செல்வத்தை கைது செய்யக்கோரி ஆரணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டக்காரர்களிடம் சமரச  பேச்சுவார்த்தை நடத்தினர்.  

குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர்,  காசிரெட்டியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், கும்மிடிபூண்டி பகுதியில் பதுங்கியிருந்த செல்வத்தை ஆரணி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: