பாஜ அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட முன்வர வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரியும் பொதுக்கூட்டம் புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முகமது தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர் எம்.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் சென்னை மாவட்ட தலைவர் ஜெ.முஹம்மது நாஸிம் வரவேற்றார். இக்கூட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தியாகு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

 
Advertising
Advertising

கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: யுஏபிஏ சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி உட்பட இஸ்லாமிய இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்ய முயற்சி எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும், அஸ்ஸாமில் 40 லட்சம் முஸ்லிம்கள் குடிமக்கள் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள பாஜ அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: