குழாய் பதித்த பள்ளத்தை முறையாக மூடாததால் குண்டும் குழியுமான எம்ஜிஆர் சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் ‘பீக் அவர்சில்’கடும் போக்குவரத்து நெரிசல்

துரைப்பாக்கம்: சென்னை தரமணியில் மெட்ரோ வாட்டர் பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் எம்.ஜி.ஆர் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர். சென்னை ராஜிவ்காந்தி சாலை பெருங்குடி சிக்னல் முதல் தரமணி நூறடி சாலை வரையில் எம்ஜிஆர் சாலை உள்ளது. சுமார் 3 கி.மீ தூரம் கொண்ட இச்சாலையில், ஏராளமான ஐ.டி நிறுவனங்கள், அரசு சட்ட பல்கலைக்கழகம் உள்பட ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதனால் இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் வந்துசெல்கின்றன.

Advertising
Advertising

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மெட்ரோ வாட்டர் பணிக்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. இப்பணி முழுவதும், முடிவடைந்தும் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால் தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் ஐடி கம்பெனி வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. அந்த வாகனங்கள் குண்டு குழியுமான சாலையில் ஊர்ந்து செல்வதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் (பீக் அவர்சிஸ்) மேற்கண்ட சாலையை கடக்க குறைந்தது ஒரு மணி நேரமாகிறது.

கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்வதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது கனரக வாகனங்கள் சகதியை தெளித்து செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இச்சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் மெட்ரோ வாட்டர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து, பல நாட்களாகியும் இன்னமும் சாலையை சரி செய்யாததால் நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம்.

பொதுவாக மெட்ரோ வாட்டர் பணிக்காக சாலையை துண்டித்தால் அந்த சாலையை அமைக்க வேண்டிய தொகையை மாநகராட்சி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர், அனுமதி பெற்றுதான் பணிகளை தொடங்க வேண்டும். பணிகள் முடிந்த பிறகு ஒப்பந்தம், எடுத்தவர்கள் தோண்டிய பள்ளத்தை சிமெண்ட் போட்டு சமன்படுத்த வேண்டும். தற்போது பணி முடிந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: