வருவாய் அதிகரிக்காததால் ஊழியர்களுக்கு தண்டனை 2,500 கலெக்ஷன் கொடு.. இல்லனா நள்ளிரவு வரை நில்லு..

* குறைவான வசூலை கொடுத்தால் வாங்காமல் அலைக்கழிப்பு

* எம்டிசி அதிகாரிகள் மீது கண்டக்டர்கள் சரமாரி குற்றச்சாட்டு
Advertising
Advertising

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் கண்டக்டர்கள் தினமும் 2500 கலெக்‌ஷன் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நள்ளிரவை வரை வசூல் பணத்தை வாங்காமல் அவர்களுக்கு எம்டிசி அதிகாரிகள் தண்டனை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) ஆண்டுக்கு சுமார் ₹500 கோடிக்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு எம்டிசியின் தினசரி வருவாய் 2.56 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பின் இந்த வருவாய் 3 முதல் 3.50 கோடி வரை உயரும் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு வருவாய் அதிகரிக்கவில்லை. கட்டண உயர்வுக்குப் பின் வெறும் 0.02 சதவீதம் மட்டுமே வருவாய் அதிகரித்துள்ளது.

அதன்படி, தற்போது தினசரி வருவாய் 2.79 கோடியாக(சராசரி) உள்ளது. வருவாயை அதிகரிக்க, அதிகாரிகள் நேரடியாக பஸ்களில் ஆய்வு செய்து, ஓசி பயணம் செய்பவர்களை பிடிப்பது, டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளிடம் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்களா என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால் டென்ஷன் ஆன அதிகாரிகள், தங்கள் கோபத்தை டிரைவர், கண்டக்டர்கள் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது, தினமும் இவ்வளவு ரூபாய் கண்டிப்பாக டிக்கெட் கட்டணம் வசூல் கொண்டுவர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கின்றனர். அதன்படி ஒரு கண்டக்டர் குறைந்தபட்சம் 2,500 பணம் கட்ட வேண்டும் என்கின்றனர்.

ஆனால் பெரிய அளவு கூட்டம் ஏறாததால் கலெக்‌ஷன் இல்லாமல் கண்டக்டர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியவில்லை. கலெக்‌ஷன் குறைவாக இருந்ததால் கிளை மேலாளர்கள் கண்டக்டர்களை தரக்குறைவாக திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள் கூறியதாவது: வழக்கமாக காலை மற்றும் மாலை பீக் அவர்சில் தான் பஸ்களில் அதிக கூட்டம் இருக்கும். பிற நேரங்களில் இருக்கைகள் காலியாக தான் இருக்கும். அதிலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய பிறகு பகல் நேரங்களில் பயணிகள் மிக, மிக குறைந்த அளவே ஏறுகின்றனர். எல்லோரும் பைக் மற்றும் ரயில் பயணத்துக்கு மாறிவிட்டனர். இதனால் டெய்லி கலெக்ஷன் 2,000 வசூல் ஆகவே மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

களத்தில் நாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறியாத கிளை மேலாளர்கள், தினமும் கலெக்ஷன் 2,000 வேண்டும், 3000 வேண்டும் என்கின்றனர். கூட்டமே இல்லாதபோது அவ்வளவு தொகைக்கு நாங்கள் எங்கே போவது? கலெக்‌ஷன் குறைவாக இருந்தால் இரவு பணி முடித்து திரும்பும்போது பணத்தை வாங்காமல் வேண்டுமென்றே நள்ளிரவு வரை இழுத்தடிக்கின்றனர். மிக, மிக தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகின்றனர். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பணியாற்றுகிறோம்.

அதிகாரிகள் பலர் லட்சக்கணக்கில் முறைகேடு செய்கின்றனர். நிர்வாகம் நஷ்டத்தில் இயங்க அதிகாரிகள் தான் முழுக்க, முழுக்க காரணம். நிர்வாக நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக காகித முறையிலேயே உள்ளது. இதை பயன்படுத்தி தான் அதிகாரிகள் கையாடல் செய்கின்றனர். அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்கினால் முறைகேடு குறையும். இதையெல்லாம் செய்யாமல் எங்கள் மீது கோபத்தை காட்டுவது நியாயமா? என்றனர்.

எம்டியின் ஆய்வால் அதிகாரிகள் ‘டென்ஷன்’

எம்டிசியில் முன்பு எப்போது இல்லாத அளவுக்கு தற்போது மண்டல மற்றும் கிளை மேலாளர்கள், தொழிலாளர்களிடம் அதிக கெடுபிடி காட்டுகின்றனர். தற்போது மேலாண் இயக்குனராக உள்ள அன்பு ஆபிரகாம், வாரத்துக்கு ஒருமுறை மண்டல மேலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தங்களுக்கு கீழ் உள்ள கிளை மேலாளர்களை தொடர்ந்து கண்காணித்து, தினமும் 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், தினசரி கலெக்‌ஷன் அதிகாரிக்க தேவையான ஆலோசனை வழங்க வேண்டும் என்று மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பிருந்த அதிகாரிகள் இதுபோன்று அடிக்கடி ஆலோசனை நடத்துவதில்லை.

இதனால் அலுவலகத்தில் காற்று வாங்கி கொண்டிருந்த மண்டல மேலாளர்கள் தற்போது களத்தில் இறங்க வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேலாண் இயக்குனர் மீதுள்ள கோபத்தில் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

* பணத்தை வாங்காமல் வேண்டுமென்றே நள்ளிரவு வரை இழுத்தடிக்கின்றனர். மிக, மிக தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகின்றனர். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பணியாற்றுகிறோம்.

* அதிகாரிகள் பலர் லட்சக்கணக்கில் முறைகேடு செய்கின்றனர். நிர்வாகம் நஷ்டத்தில் இயங்க அதிகாரிகள் தான் முழுக்க, முழுக்க காரணம். நிர்வாக நடவடிக்கைகள் பல ஆண்டுகள் பின்தங்கி காகித முறையிலேயே உள்ளது.

Related Stories: