ஜோலார்பேட்டையில் ரயில்வே தண்டவாள பராமரிப்பாளரை தாக்கிய டிடிஆர் மீது வழக்கு

ஜோலார்பேட்டை, செப். 11: ஜோலார்பேட்டையில் ரயில்வே தண்டவாள பராமரிப்பாளரை தாக்கிய டிடிஆர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா(45), ரயில்வே ஊழியர். இவர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கம்பட்டி ரயில் நிலையத்துக்கும் பச்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், நேற்று குப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வருவதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சக ஊழியர்களுடன் குப்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி பயணம் செய்துள்ளார்.அப்போது, அதே ரயிலில் டிடிஆராக பணியில் இருந்த மாணிக்கவாசகம்(42) என்பவர் மல்லிகா அர்ஜூனா உட்பட ரயில்வே ஊழியர்களை முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் எதற்காக பயணம் செய்கிறீர்கள் எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டினாராம்.

அப்போது, அவர்கள் நாங்களும் ரயில்வே ஊழியர்கள் தான். ரயிலில் பயணம் செய்ய எங்களுக்கும் உரிமை உள்ளது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாணிக்கவாசகம் மல்லிகார்ஜூனாவை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மல்லிகார்ஜூனா ஜோலார்பேட்டை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், மல்லிகார்ஜூனா பணி செய்யவிடாமல் தன்னை தாக்கியதாக மாணிக்கவாசகம் காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: