குடியாத்தம் அருகே பரபரப்பு போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை கோரி பெண்கள் சாலை மறியல் கேலி, கிண்டலுடன் வீடுகளின் மீது கற்கள் வீச்சு

குடியாத்தம், செப்.11: குடியாத்தம் அருகே குடிபோதையில் ரகளை செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிச்சனுர்பேட்டை நரிகுள்ளப்பன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு லைன் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு போதையில் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் வீட்டின் மீது கற்களை வீசுவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, நரிகுள்ளப்பன் தெரு மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை குடியாத்தம்- பலமநேர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் வாலிபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், குடியாத்தம்- பலமநேர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: