வத்தலக்குண்டு பகுதியில் 58ம் கால்வாய் திட்டம் அதுக்குள்ளே... அம்போ சிறு, சிறு ஓட்டைகளால் வீணாகும் தண்ணீர்

வத்தலக்குண்டு, செப். 7: வத்தலக்குண்டு பகுதியில் 58ம் கால்வாயின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியும் பயனடையும் வகையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர 58ம் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.

Advertising
Advertising

ரூ.87 கோடி செலவில் பணிகள் முடிந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இக்கால்வாயில் தண்ணீர் வெள்ளோட்டம் விடப்பட்டது.ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலம் என பெருமை கொண்ட இக்கால்வாயில் குன்னத்துபட்டிக்கும், தெப்பத்துபட்டிக்கும் இடையே 100 மீட்டர் நீளத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து தண்ணீர் ஆங்காங்கே வெளியேறுகிறது. மேலும் சில இடங்களில் கசிகிறது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதேபோல் குன்னத்துபட்டி ஊர் நுழையுமிடத்தில் உள்ள மண்கரை கால்வாயில் அளவுக்கதிகமாக தண்ணீர் கசிந்து வெளியேறி வீணாகி கொண்டிருக்கிறது.

இதனால் அப்பகுதியே குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து தெப்பத்துபட்டி பழனிச்சாமி கூறுகையில், ‘‘பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 58ம் கால்வாயில் பணிகள் முடிந்து 2 வாரத்திற்கு முன்பு தண்ணீர் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் கால்வாயில் சின்னஞ்சிறு ஓட்டைகள் வழியே தண்ணீர் பீறிட்டு வீணாகிறது. இதனால் நாளைடைவில் ஓட்டை பெரிதாகி தண்ணீர் அதிகம் வெளியேறி வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: