மேலூர் அருகே தீயாய் பரவும் மர்மக்காய்ச்சல் 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மேலூர், செப். 7: மேலூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மேலூர் அருகே தனியாமங்கலம் ஊராட்சியில் உள்ள காலனியில் கடந்த ஒரு வாரமாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இக்கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி(30), அவரது கணவர் பாலமுருகன்(37), தனியார் பாலிடெக்னிக் மாணவர் அருண்(18), சண்முகநதி(45), தேவி(37), முத்துமணி(37), வீரம்மாள்(25), மூக்கம்மாள்(46) என 50க்கும் மேற்பட்டோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனை மற்றும் வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியாமங்கலம் ஊராட்சியில் காலனி பகுதியில் மட்டுமே இந்த தொடர் காய்ச்சல் உள்ளது. இங்குள்ள மேல்நிலை தொட்டி அடிக்கடி சுத்தம் செய்யப்படாததே இதற்கு முக்கிய காரணம். அப்படி சுத்தம் செய்யப்பட்டாலும் அந்த அழுக்கு நீர் மேல்நிலை தொட்டியின் கீழ்புறமே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிவுநீர் கலந்த தண்ணீரை பருகியதே காய்ச்சலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இத்துடன் சுற்றுப்புறத்தில் உள்ள சுகாதாரக் கேட்டால் உற்பத்தியாகும் கொசுகளும் இதற்கு காரணம் என கிராம மக்கள் கூறுகின்றனர். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மேலூர், வெள்ளலூர் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர் காய்ச்சலை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம்சிவனேசன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர், சுகாதார ஆய்வாளர்கள் தண்டியப்பன், ராதாகிருஷ்ணன் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். வீடுகள் தோறும் கொசு மருந்து அடிப்பது, குளோரினேசன் செய்வது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை கொடுப்பது, அதிக காய்ச்சல் பாதித்தவர்களை தங்கள் வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு எடுத்து செல்வது என நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியினர் போட்டியால் திறக்கப்படாத சுகாதார நிலையம்

அதிக மக்கள் தொகை கொண்ட தனியாமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரிக்கை இருந்தது. இதனை ஏற்று அரசு ரூ. 70 லட்சம் இதற்காக நிதியும் ஒதுக்கி உத்தரவிட்டது. ஆனால் வளாகம் அமைய உள்ள இடம் குறித்து கிராம மக்களிடம் இரு வேறு கருத்து ஏற்பட்டதால் அப்பணி நடைபெறாமல் உள்ளது. உடனடியாக வாடகை கட்டிடத்தில் சுகாதார நிலையத்தை அமைத்து விடலாம் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் நடந்து முடிந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இதை திறக்கலாம் என அரசு உத்தரவிட்டும், பின்னர் அது வேறு சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆக.4ல் இது திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை திறப்பது எந்த அமைச்சர் என்பதில் அதிமுகவினருக்குள் ஏற்பட்ட பிரச்னையில் திறப்பு விழா நிறுத்தப்பட்டது. அரசியல்வாதிகளுக்குள் உள்ள பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது என்னவோ கிராம மக்கள் தான்.

அவனியாபுரம் மக்களும் பாதிப்பு

அவனியாபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளான பெரியசாமி நகர், பெரியார் நகர், வள்ளலானந்தபுரம், காமராஜ் நகர் போன்ற பகுதிகளில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 1 வாரமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. சாக்கடை கலந்த குடிநீரை பருகுவதாலும், குப்பை மற்றும் திறந்த வெளி கழிவுநீர் சாக்கடையில் கொசு உற்பத்தியாவதாலும் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கவோ, சுத்தப்படுத்தவோ மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர். மர்மக் காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படும் முன் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: