நிலையூர் கிளைக்கால்வாய்களை பராமரிக்காததால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாகிறது

திருப்பரங்குன்றம், செப்.7: நிலையூர் கால்வாயின் கிளை வாய்க்கால்களை தூர் வாரி முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் இருந்து நிலையூர் கால்வாய் துவங்குகிறது. சுமார் 30 கி.மீ நீளமுள்ள இந்த கால்வாய் நிலையூர் கண்மாய் வரை செல்கின்றது.நிலையூர் கால்வாய் வரும் வழியில் உள்ள கொடிமங்கலம், காமாட்சிபுரம், கீழமாத்தூர் , துவரிமான், மாடக்குளம், வடிவேல்கரை, விளாச்சேரி, தென்கால், பானாங்குளம் உள்ளிட்ட 22 கண்மாய்களுக்கு நீராதாரமாக விளங்குகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் வைகையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரில் சுமார் 350 கன அடி நீர், இந்த நிலையூர் கால்வாயில் திறந்து விடப்பட்டது.

Advertising
Advertising

அப்படி திறந்து விடப்பட்ட நீர் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நிலையூர் கால்வாயில் சில இடங்களில் குறிப்பாக புல்லூத்து உள்ளிட்ட பகுதிகளில் முறையாக தூர் வாரப்படாததால் தண்ணீர் வீணாகி வருகிறது. விளாச்சேரி, தென்கால் போன்ற பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாத நிலையில் உள்ளது. மேலும் நிலையூர் கால்வாயில் தூர் வாரப்பட்ட ஒரு சில இடங்களில் முட்களை அப்புறப்படுத்தாமல் கால்வாயில் போட்டதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தண்ணீர் வீணாவதை தடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: