காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மீது கல்வீச்சு முதல்வர் அறை கண்ணாடி உடைப்பு

திருமங்கலம், செப்.7: திருமங்கலம் காமராசர் உறுப்புக்கல்லூரியில் மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முதல்வர் அறை உள்ளிட்ட இடங்களில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூரில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. நான்கு வழிச்சாலையில் உள்ள இந்த கல்லூரி கடந்த ஆண்டு முதல் புதுக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி முடிவடைந்தவுடன் மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் சென்றுவிடவே கல்லூரியை மூடி ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு  வாட்ச்மேன் பாண்டியராஜ் கல்லூரியை திறக்கவந்த போது முன்பக்க வாசல் கதவிலுள்ள கண்ணாடிகள், முதல்வர் அறை ஜன்னல் கண்ணாடிகளை யாரோ மர்மநபர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கி உடைத்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் கல்லூரிக்கு வந்த விசாரணை நடத்தினர். முதல்வர் அறைக்குள் ஏராளமான கற்கள் சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காமிரா இல்லை

திருமங்கலம் காமராசர் உறுப்புக்கல்லூரியில் கண்காணிப்பு காமிரா இல்லை. இதனால் கல்லூரிக்குள் புகுந்து கல்வீசி கண்ணாடிகதவு, ஜன்னல்களை உடைத்தது யார் என தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி காமிராவை வைக்க முடிவு செய்துள்ளது.

Related Stories: