குறைவான அளவில் இயக்கப்படுவதால் அரசு பஸ் மேற்கூரையில் பயணம் செய்யும் மாணவர்கள் போக்குவரத்து நிர்வாகம் கவனிக்குமா?

திருப்பரங்குன்றம், செப்.7: திருப்பரங்குன்றம் அருகே  குறைவான அளவில் இயக்கப்படுவதால், உயிரை பணயம் வைத்து பஸ் மேற்கூரையில் அமர்ந்து மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் அருகே  நிலையூர் கைத்தறி நகர் உள்ளது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு மற்றும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்கள்  அனைவரும் பெரும்பாலும் மாநகர அரசு பஸ்களை மட்டுமே பயன்படுத்தும்  நிலையில் உள்ளது. கைத்தறி நகரில் இருந்து காலை நேரத்தில் ஒரு சில நகர பஸ்களே நகருக்கு இயக்கப்படுகின்றது.  

Advertising
Advertising

இதனால் இப்பகுதி மக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள்  வேறு வழியின்றி மிகவும் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து பஸ்சின் மேற்கூரை மற்றும் பின்புறம் உள்ள படிக்கட்டில் தொங்கிக் கொண்டே  பயணம் செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து  துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்களா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில்  கூடுதல் அரசு பஸ்களை இயக்க இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: