பெண்ணிடம் நகை பறிப்பு

அலங்காநல்லூரை அடுத்த கல்லணையைச் சேர்ந்தவர் முத்துகண்ணன் மனைவி ஜான்சிராணி(26).இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து ஜான்சிராணி அணிந்திருந்த 3 பவுன் தங்கநகையை பறித்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.

Advertising
Advertising

திருடிய 2 பேர் கைது

பாலமேட்டை அடுத்த வலையபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(33). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பெயர் கீதாஞ்சலி (25). இவர்கள் பீரோவை திறந்து வைத்துவிட்டு வெளியில் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே ஊரைச்சேர்ந்த 16 வயது வாலிபர், பீரோவில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து ஆறுமுகம் என்பவரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

மதுரை கரிமேடு பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன்(59). கான்சாமேட்டு தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் காசி சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கரிமேடு போலீசில் சங்கரன் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற 5 பேர் கைது

மதுரை கரிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில் ஆரப்பாளையம் சரஸ்வதி(66), அருள்தாஸ்புரம் பால்பாண்டி(48), வாழைதோப்பு விஜயலட்சுமி(41), அவனியாபுரம் வீரமணி(18), ரபிக்ராஜா(19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த முதியவர் பலி

உசிலம்பட்டி அருகே  இடையபட்டி புதுப்பட்டி உள்ளது.  இந்த ஊரில் நடக்கும்  உறவினர் விஷேசத்திற்கு மதுரை மேலமடையைச்சேர்ந்த பாண்டி(60) வந்திருந்தார். நேற்று குளிப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்.அப்போது கிணற்றில் தண்ணீர் உள்ளதா என எட்டி பார்த்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். தண்ணீரில்லாத  கிணறு என்பதால் பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே பாண்டி பலியானார். அவரது  உடலை போலீசார் கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: