காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

வேலூர், செப்.7:விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓ பார்த்தீபன், சப்-கலெக்டர்கள் பிரியங்கா பங்கஜம், மெக்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான அரசாணையில், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமலும், மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவேண்டும். சிலைகளை வைப்பதற்கான அனுமதி பெற சப்-கலெக்டர், ஆர்டிஓக்களிடம் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடமும் விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடம் தனியார் நிலமாக இருப்பின் நில உரிமையாளர் கடிதம், பொது இடமாக இருப்பினும் இந்த இடத்திற்கான துறையின் ஆட்சேபணையில்லா சான்று பெறப்பட வேண்டும்.தற்காலிக கூரை அமைத்தும், கூரைகள் தீப்பற்றாத வகையில் உள்ளதாக தீயணைப்புத்துறையிடம் சான்று பெறவேண்டும். மின்இணைப்பு பெறுவது குறித்து ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கெமிக்கல் இல்லாமல் எளிதில் கரையும் வகையில் களிமண்ணால் மட்டுமே விநாயகர் சிலைகள் செய்திருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்திருக்கக்கூடாது. சிலை வைக்கும் கொட்டகையில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கக்கூடாது. முதலுதவிக்கு தேவையான மருந்து பொருட்கள் இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது. மின் திருட்டு செய்யக்கூடாது. 24 மணி நேரமும் இரு தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மின் தடை ஏற்படும்போது மின் வசதி ஏற்படுத்த ஜெனரேட்டர் வசதிகள் செய்து இருக்க வேண்டும். காய்ந்து கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதற்கான பணிகளில் அந்தந்த உள்ளாட்சி துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். சிலை வைக்கப்பட்ட 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்்ள வேண்டும். சிலைகள் விஜர்சன ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தொடங்கி அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே கொண்டு சென்று கரைக்கவேண்டும். அதுவும் நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், மின்வாரியம், தீயணைப்பு துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: