வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவருவதற்கு நடவடிக்கை

வேலூர், செப்.7: அமிர்தி வரும் சுற்றுலா பயணிகளுக்காக உணவருந்தும் கூடம் கட்ட ₹10 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.வேலூர் அமிர்தி சிறு வன உயிரியல் பூங்காவில் மான், முயல், நரி, முள்ளம்பன்றி, முதலை உள்ளிட்ட விலங்குகளும், மயில், கழுகு, பருந்து, கிளி உள்ளிட்ட பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமைதோறும் அமிர்தி வன உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை, விசேஷ நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், செவ்வாய்க்கிழமைகளில் அரசு விடுமுறை இருந்தாலும், அமிர்தி வன உயிரியல் பூங்கா திறந்திருக்கும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு அமிர்தி வன உயிரியல் பூங்கா மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமிர்தியில் குரங்குகள் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. இதனால், பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, அமிர்தியில் சுற்றுலா பயணிகள் உணவருந்தும் கூடம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி, அமிர்தி வன உயிரியல் பூங்காவில் உணவருந்தும் கூடம் கட்டுவதற்காக ₹10 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அமிர்தி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் அமர்ந்து சாப்பிடுவதற்கு காற்றோட்டமான சூழ்நிலையில் 100 பேர் அமரும் வகையில் உணவருந்தும் கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ₹10 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், கட்டிட பணி தொடங்கப்படும். குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள் என்பதால், பலர் அவசர அவசரமாக வெளியே சென்றுவிடுகின்றனர். உணவருந்தும் கூடம் கட்டினால், பொறுமையாக அமிர்தி பூங்காவை பார்வையிட முடியும்’ என்றனர்.

Related Stories: