கூட்டுறவு வங்கி தேர்தலில் முறைகேடு : தமிழக முதல்வருக்கு மனு

ஆம்பூர், செப்.7: ஆம்பூர் அருகே கூட்டுறவு வங்கி தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கி இயக்குனர்களுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அடையாளம் வைக்கப்படவில்லை. இதனால் ஒரு சிலர் தொடர்ந்து கள்ள ஓட்டுகளை போட்டதாகவும், இறந்தவர்களின் பெயரில் ஒரு சிலர் ஓட்டுப்போட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரி கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் சிலர் தமிழக முதல்வரின் தனி பிரிவில் புகார் மனு அளித்துள்ளனர்.மேலும் இந்த வங்கியின் தேர்தல் அலுவலர்களிடம், இதுகுறித்து முறையிட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க ஆணைய தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: