சிறப்பு கிராமசபை கூட்டத்தில் வாக்காளராக சேர விண்ணப்பிக்கலாம்

மதுரை, செப். 6:  வாக்காளர் சேர்ப்புக்காக நாளை மறுநாள் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் வாக்காளராக சேர விண்ணப்பிக்கலாம். மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 44 ஆயிரத்து 739 பேரும், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 71 ஆயிரத்து 765 பேரும், இதர வாக்காளர்கள் 110பேர் என மொத்தம் 25 லட்சத்து, 16 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 2,716 வாக்குச்சாவடிகள் உள்ளன. வரும் 1.1.2019 தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இதற்காக வரும் 9 மற்றும் 23ம் தேதியும், அக்.7, 14ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடக்கூடாது என கருதிய தேர்தல் ஆணையம்  செப்.8, (நாளை மறுநாள்) 22 மற்றும் அக்.6., 13 ஆகிய தேதிகளில் சிறப்பு கிராமசபை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.இந்த கிராமசபை கூட்டங்களில் வாக்காளர் பட்டியல் சபையில் வைக்கப்பட்டிருக்கும்.  இதில் வாக்காளர் பெயர், புகைப்படத்தில் தவறு இருந்தால், திருத்தம் செய்ய படிவம்-8 பெற்று பூர்த்தி செய்து கிராம சபையில் வாக்காளர்

கொடுக்கலாம். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து இதுவரை வாக்காளராக சேராதவர்கள் படிவம்-6 பெற்று உரிய ஆவணத்துடன் புதிய வாக்காளராக சேர கிராம சபையில் விண்ணப்பிக்கலாம்.

கிராமத்தில் உள்ள பெண் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டால், உரிய குடும்பத்தினர் பட்டியலில் இருந்து அப்பெண்ணை நீக்க படிவம்-7ஐ பெற்று பூர்த்தி செய்து கிராம சபையில் உள்ள அதிகாரிகளிடம் கொடுக்கலாம். வாக்காளருக்கு தேவையான படிவத்தை அதிகாரிகள் வழங்குவார்கள். அதை கிராம மக்கள் பெற்று பூர்த்தி செய்த அங்குள்ள அதிகாரிகளிடம் உடனே வழங்கலாம். அந்த மனுக்கள் பரிசீலனைக்கு பின் பட்டியலில் வாக்காளராக சேர்க்கப்பட்டு  வரும்.ஜன.4ம் தேதி வெளியிடப்படும்.

Related Stories:

>