×

திருமானூர் அரசு மணல் குவாரியால் பழமையான பாலத்திற்கு ஆபத்தா? உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

அரியலூர்,செப்,5: திருமானூர் அரசு மணல் குவாரியால் பழமையான பாலம் பலவீனமாக உள்ளதா? என உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர், தஞ்சை மாவட்டம் இரண்டையும் இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குவது திருமானூரில் அமைக்கப்பட்ட கொள்ளிடம் பாலம். இந்த பாலம் கடந்த 1969ம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட பாலம் ஆகும். சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலம் அரியலூர் மாவட்டம் தஞ்சை மாவட்டம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய பிரதான பாலமாகும்.

சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் தூரம் கொண்ட இந்த பாலத்தின் 500 மீட்டருக்கு அருகில் தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து வந்தது. சுமார் 20 அடிக்கும் மேலான பள்ளத்தில் மணல் எடுக்கப்பட்டு அருகே உள்ள விவசாய ஆழ்குழாய் கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதால் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்பொழுது பாலத்தின் அருகில் ஒரு பகுதியிலும் அதன் மறுமுனை தஞ்சை பகுதியிலும் இரண்டு மணல் குவாரிகள் அமைக்க அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம பொதுமக்கள் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி மணல் குவாரிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சற்றும் செவி சாய்க்காத தமிழக அரசு மணல் குவாரி அமைப்பதற்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குவாரி தொடங்கப்பட்டன.

ஏற்கனவே அமைக்கப்பட்ட மணல் குவாரி நாள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாலம் பலவீனம் அடைந்துள்ளதாகவும் அதிக ஆழத்திற்கு வெட்டி எடுக்கப்பட்ட மணலால் அருகே உள்ள விவசாய ஆழ்குழாய் கிணறுகள் வரண்டும் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று உள்ளதால் சுமார் பத்து மாவட்டத்திற்கு மேல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் பாதிக்கப்படுவதாக அரியலூர் மாவட்டத்தில் சென்னையிலும், தஞ்சை மாவட்டத்தினர் மதுரையிலும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மணல் குவாரி அமைக்க பகுதியை ஆய்வு செய்தும் கண்காணிக்கும் குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குழுக்கள் அந்த பணிகளை மேற்கொண்டனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்பொழுது திருச்சியிலிருந்து சுமார் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு முக்கொம்பு பாலம் மற்றும் காவிரி பாலம் உடைப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருமானூர் தஞ்சை இணைக்கும் பாலம் பலவீனம் அடைந்து இருக்கலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே இந்த பாலத்தை ஆய்வு செய்து அதன் உறுதிதன்மை எப்படி உள்ளது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தள்ளனர். மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட மணல் குவாரியினால் பாலம் பாதிப்படைந்த நிலையில் புதிதாக மணல் குவாரி அமைத்தால் 50 ஆண்டுகள் பழமையான பாலம் உடையும் சூழ்நிலை ஏற்படும் என பொது மக்கள் கூறியுள்ளனர். எனவே தமிழக அரசு திருமானூர் மற்றும் தஞ்சை பகுதியில் இரண்டு மணல் குவாரிகள் அமைக்க முடிவை கைவிட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது