பனிக் காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் வைரஸ் தொற்று!

நன்றி குங்குமம் தோழி

‘‘பகலில் வெயில், மாலையில் மழை, இரவில் பனி... இப்படி சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களால், வைரஸ் தொற்று பரவும். இந்த தொற்று, குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களையும் பாதிக்கும். மேலும் இந்த காலத்தில் தான் இது போன்ற வைரஸ் கிருமிகள் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளைதான் இந்த வைரஸ் தொற்று அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்’’ என்கிறார் குழந்தை தொற்று நோய் நிபுணர் டாக்டர் ராஜ்குமார்.

‘‘பனிக் காலத்தில் பரவும் இந்த வைரஸ் தொற்று, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதால், அந்த பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் தொற்று அதிகமாகும் போது, நெஞ்சில் சளி கட்டுவது, காது வலி, தொண்டை வலி என நிமோனியாவின் பாதிப்பையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பொதுவாக வைரஸ் தொற்றினால் ஏற்படும் சளி மற்றும் ஜுரத்தின் பாதிப்பு அதிக பட்சம் மூன்று  நாட்களுக்கு தான் இருக்கும். அதன் பிறகு குறைந்திடும். ஆனால் மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம். இதை கவனிக்காமல் இருந்தால், இதன் பாதிப்பு வேற சில பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

மழைக் காலத்தில் ஏற்படும் மற்றொரு பிரச்னை வாந்தி, பேதியை தொடர்ந்து காய்ச்சல். பொதுவாக மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கம் ஏற்படும் போது அதில் சாக்கடைத் தண்ணீர் கலந்து மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த தண்ணீரை நாம் பருகும் போது, டைபாய்டு போன்ற நோய்களின் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீர் நம்முடைய அத்தியாவசியம் என்பதால், அதனை மழைக் காலம் மட்டுமில்லாமல் எல்லா நேரங்களிலும் காய்ச்சி பருகுவதை பழக்கமாக கொள்ள வேண்டும்.

அடுத்து மழைக்காலத்தில் நீர் தேக்கம் காரணமாக கொசுவின் பரவலும் அதிகமாக இருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பழைய உடைந்த பொருட்கள், தேங்காய் மூடி, பழைய டயர் போன்ற தேவையில்லா பொருட்களை அப்புறப் படுத்த வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதனால் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. இவற்றையும் நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டும். தேவைப்பட்டால் கொசுவலை அல்லது கொசுக்கள் கடிக்காமல் இருக்க பயன்படுத்தப்படும் கிரீம்களை உபயோகிக்கலாம்.

மழை மற்றும் பனிக்காலத்தில் பரவும் வைரஸ் தொற்று காய்ச்சல் இன்ஃப்ளூவென்சா பாதிப்பாகவும் இருக்கலாம். அதன் தாக்கம் அதிகமாக இல்லாமல் பாதுகாக்க அதற்கான தடுப்பூசியினை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஊசி குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களும் போட்டுக் கொள்ளலாம். அவ்வாறு முன்னெச்சரிக்கையாக போடப்படும் தடுப்பூசி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளியின் பாதிப்பு ஏற்பட்டால், அதன் தாக்கம் அதிகளவில் இல்லாமல் சீக்கிரமே குணமாக உதவியாக இருக்கும்.

தண்ணீர் காய்ச்சி குடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது என பாதுகாப்பு முறையினை கடைப்பிடித்தாலும், நாம் எப்போதும் நம்முடைய மனதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய விஷயம் நம்முடைய கைகளை சுத்தமாக வைப்பது. கொரோனாவிற்கு பிறகு பலர் இதில் அக்கறை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், சாப்பிடுவதற்கு முன் மற்றும் கழிவறைக்கு சென்ற பிறகு கண்டிப்பாக நம்முடைய கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அது வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்னையை ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படும் உடல் பாதிப்பினை முழுமையாக தடுக்க முடியாது. ஆனால் அவை வராமல் இருக்கக் கூடிய முறைகளை நாம் கடைப்பிடிக்கலாம். வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி மற்றும் ஜுரம் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. பெரியவர்கள் அலுவலகத்திற்கும் விடுமுறை எடுக்கலாம். சளி மற்றும் ஜுரத்தின் தாக்கம் உள்ளவர்கள் தும்மினால் கூட அது மற்றவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். அவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்வது அவசியம்.

அவர்கள் பயன்படுத்தும் தலையணை, பெட்ஷீட் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. இது காற்றிலும் பரவும் தொற்று என்பதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியம், அடுத்து உணவு. இது போன்ற காலத்தில் பலர் வெண்டைக்காய், கொய்யா போன்ற காய்கறி மற்றும் பழங்களை தவிர்ப்பார்கள். காரணம் இவை நீர் காய். சளி பிடிக்கும் என்பார்கள். அது தவறான கண்ணோட்டம். காய் மற்றும் பழங்களை பொறுத்த வரை அவை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்குமே தவிர தீங்கு விளைவிக்காது.

அதனால் எல்லா காலங்களிலும் அனைத்து வகையான காய் மற்றும் கனிகளை தைரியமாக சாப்பிடலாம். இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமே தவிர குறைக்காது. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் ஆரோக்கியம் மற்றும் உடலில் தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அதிக அளவு தண்ணீர் உட்கொள்வதை மனதில் கொள்ளுங்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான போஷாக்கு மற்றும் தண்ணீர் கிடைக்கும்.

கொரோனா காரணத்தால் அந்த இரண்டு வருடம் குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசியினை பலர் போடாமல் வைத்துள்ளனர். விடுப்பட்ட தடுப்பூசிகளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு போட்டு விடுங்கள். மேலும் தற்போது மீசில்ஸ், தட்டம்மை, சிக்கன்பாக்ஸ் போன்றவையும் பரவுவதால், அதற்கான தடுப்பூசியினை குழந்தைகளுக்கு போட தவறியிருந்தால், அதனை டாக்டரின்ஆலோசனைப்படி போட்டுக் கொள்வது அவசியம்’’ என்றார் குழந்தை தொற்று நோய் நிபுணர் டாக்டர் ராஜ்குமார்.

தொகுப்பு : ரிதி

Related Stories: