×

நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு மணல் குவாரியை கிராம மக்கள் முற்றுகை

ராமநாதபுரம், ஆக.15: ராமநாதபுரம் அருகே உள்ள மணல்குவாரியை மூட வலியுறுத்தி கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை பகுதியில் சவடு மணல் குவாரி உள்ளது. இப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் ெவகுவாக குறைந்துபோனது. இதனால் இந்த குவாரியில் மணல் அள்ள ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் அப்பகுதிமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சித்தார்கோட்டை கிராமத்தலைவர் நாகேந்திரன் தலைமையில் பழனிவலசை, குலசேகரக்கால்பட்டிணம் உள்ளிட்ட 14 கிராமமக்கள் தடையை மீறி மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மணல் குவாரியை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் மணல் அள்ள பயன்படுத்திய 3 டிராக்டர்களையும் சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ராமநாதபுரம் டிஎஸ்பி நடராஜன் மற்றும் போலீசார் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை