×

ஓய்வு பயிற்சியாளரால் 3 ஆண்டாக தோல்வியை சந்திக்கும் விளையாட்டு விடுதி கால்பந்து அணி கேள்விக்குறியான வீரர்களின் எதிர்காலம்

மதுரை, ஆக.15: மதுரையில் ஓய்வு பெற்ற பயிற்சியாளர்களால், கடந்த 3 ஆண்டுகளாக விளையாட்டு விடுதி கால்பந்து அணி தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை கிளை அலுவலகத்தின் கீழ் விளையாட்டு விடுதி இயங்கி வருகிறது. இங்கு தடகளம், ஹாக்கி, கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக பயிற்சியாளர்களை விளையாட்டு ஆணைய மதுரை கிளை நியமித்துள்ளது. இங்கு வீரர்கள் தங்கியிருந்து, வெளியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். மதுரை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், திண்டுக்கல், நெய்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் ஊட்டி விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான போட்டிகள் நடத்தப்படும். இதில் இறுதி போட்டியில் வெற்றி மற்றும் தோல்வி பெறும் அணிகள் மட்டுமே மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி கிடைக்கும். ஆனால் அவுட்சோர்சிங் முறையில் ஓய்வு பெற்றவரை கால்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளதால் கடந்த 3ஆண்டுகளாக விளையாட்டு விடுதி அணி வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது.

கால்பந்து போல ஹாக்கி, டென்னிஸ், எறிபந்து, தடகளம், டெபிள் டென்னிஸ் உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் உள்ளனர். கால்பந்துக்கு மட்டும் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றவரை பயிற்சியாளராக விளையாட்டு ஆணைய மதுரை கிளை நியமித்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வருவதை ஒரு பொருட்டாக விளையாட்டு ஆணைய மதுரைக் கிளை நினைக்க வில்லை. பயிற்சியாளரை மாற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கால்பந்து வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது. இதுகுறித்து வீரர்கள் கூறுகையில், ‘‘கால்பந்து வீரர்கள் மட்டுமே 34 பேர் இருக்கிறோம். எங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர், கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மற்ற விளையாட்டுகளுக்கு இளம் பயிற்சியாளர்கள் நிரந்தரமாக நியமித்திருக்கின்றனர்.  காலை, மாலை பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும். அவர் வராத நேரங்களில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் வந்து பயிற்சி அளிப்பதாக கணக்கு காட்டுகின்றனர். எங்களுக்கு இளம் பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அப்போது தான் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தமிழக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி சாதிக்க முடியும். எனவே எங்களின் எதிர்காலத்தை நன்றாக்க விளையாட்டு ஆணைய மதுரைக்கிளை நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை