×

கவர்னர் உத்தரவுபோட அதிகாரம் கிடையாது

புதுச்சேரி,  ஆக. 15: புதுவையில்
ஹெல்மெட் கட்டாயம் சட்டத்தை அமல்படுத்த கவர்னர்  கிரண்பேடி டிஜிபிக்கு தன்னிச்சையாக உத்தரவிட முடியாது என முதல்வர்  நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார். புதுவையில் விபத்துக்களை தடுக்கும்  விதமாக அமல்படுத்தப்பட்ட ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கடுமையாக  நடைமுறைப்படுத்தவும், காவலர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவும் டிஜிபிக்கு கவர்னர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார். இதுதொடர்பாக  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்தால் ஏற்படும்  உயிரிழப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தி  இருந்தார்.  இந்தநிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் குபேர் நினைவு  தினத்தையொட்டி பாரதி பூங்கா அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு  சார்பில் நேற்று மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல்வர்  நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், புதுவையில் ஹெல்மெட் சட்டத்தை  நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு ஏற்கனவே முடிவெடித்து பல விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடத்தினோம். கட்டாய ஹெல்மெட் குறித்து சட்டசபையில் கேள்வி எழுந்தது. அப்போது  எம்எல்ஏக்கள், விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

அனைவரும் ஹெல்மெட் அணிய வேலைகளை பார்த்ததாகவும், அதை நடைமுறைப்படுத்தவும், அபராதம் போடுவதும் சரிவராது. ஹெல்மெட் அணிவது தொடர்பாக மாநில அரசு சார்பில்  தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கவர்னர்  கிரண்பேடி தனிப்பட்ட முறையில் ஹெல்மெட் அணிய டிஜிபிக்கு நேரடியாக உத்தரவிட  முடியாது. அவர் தனது கருத்துக்களை சொல்லலாம். அதை சொல்லும்போது அந்த  துறையின் தலைவர், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோடு கலந்துபேசி அதற்கு  தேவையான கோப்புகளை தயார் செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்.  அதற்குபிறகு சட்டசபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அரசு  முடிவெடுக்கும். தன்னிச்சையாக உத்தரவிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவர்கள் விதிமுறைப்படி அந்த அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோடு கலந்து பேசி அதன்பிறகு செயலர், தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பப்படும். அவர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு  கோப்பை அனுப்பி முடிவெடுக்கப்படும். நாம் இப்போது சர்வாதிகார ஆட்சியில்  இல்லை. இங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களுக்கு மட்டுமே உத்தரவுபோடும் அதிகாரம் உள்ளது. இதனால் கவர்னர்  ஹெல்மெட் அணிய டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக அவர்கள் கோப்பு  அனுப்பிய பிறகு பார்க்கலாம். தேவைப்பட்டால் இதுதொடர்பாக காவல்துறை தலைமை  அதிகாரியை நானே அழைத்து பேசுவேன் என்றார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...