×

ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

வில்லியனூர், ஆக. 15: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சல்போனிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று புதுவை மாநிலம் மங்கலம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தது. அப்போது கம்பெனி செக்யூரிட்டி நள்ளிரவு ஆகிவிட்டதால் காலையில் உள்ளே செல்லலாம், அதுவரை அருகில் நிறுத்தி வையுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து டிரைவர் நந்தலால் (47) கம்பெனி அருகில் சாலையோரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. உடனே டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ள லாரி டிரைவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கவிழ்ந்த லாரி டேங்கரில் இருந்த சல்போனிக் ஆசிட் வெளியேறி சாலையோரத்தில் ஆறாக ஓடியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட கெமிக்கல் கம்பெனி அதிகாரிகளிடம், ஆபத்தான அமிலம் வெளியேறி சாலையோரம் தேங்கி உள்ளது. இன்னும் சிறிதுநேரத்தில் சங்கராபரணி ஆற்றிலும் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கெமிக்கல் கம்பெனி ஊழியர்கள் டேங்கர் துவாரத்தை அடைத்து, ஆசிட் வெளியேறாமல் தடுத்தனர். மேலும் சாலையோரம் மற்றும் அருகில் உள்ள குட்டையில் தேங்கிய ஆசிட்டை மோட்டார் மூலம் மற்றொரு டேங்கர் லாரிக்கு மாற்றினர். தொடர்ந்து கிரேன்கள் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...