×

குமரி வனப்பகுதியை சரணாலயமாக மாற்ற எதிர்ப்பு 48 மலைக்கிராமங்கள் அழிந்து ேபாகும் அபாயம் குலசேகரத்தில் 21ம் தேதி பா.ஜ. மறியல்

நாகர்கோவில், ஆக.15 :  குமரி மாவட்ட பா.ஜ. தலைவர் முத்துக்கிருஷ்ணன், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது :குமரி மாவட்ட வன பகுதிகளை களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலய பகுதியுடன் இணைக்கும் வகையில் கடந்த 13.8.2012 அன்று அப்போதைய அதிமுக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. இதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வனப்பகுதிகளில் உள்ள மக்கள் வன விலங்குகளுக்கு இரையாகி வருகிறார்கள். இந்த நிலையில் புலிகள் சரணாலய பகுதியாக மாற்றினால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும். 48 மலை வாழ் கிராமங்கள், அவற்றை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறிகொடுக்கும் நிலை ஏற்படும். இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். புலிகள் சரணாலய பகுதியாக, குமரி வனப்பகுதிகளை அறிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 21.8.2018 அன்று குலசேகரம் சந்திப்பில் பா.ஜ. சார்பில் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் பா.ஜ.வினர் மட்டுமின்றி மலைவாழ் கிராம மக்கள், விவசாயிகள், வியபாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள்.

மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் தக்கலையில் வருகிற 26ம் தேதி பா.ஜ. சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இது தவிர மாவட்டம் முழுவதும் 400 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தப்படும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குமரி மாவட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை தந்து இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, 124 மாநில சாலைகள் சீரமைப்பு, ரூ.2500 கோடியில் நான்குவழிச்சாலை திட்டம், பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பால பணிகள், கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே இரட்டை மின் ரயில் பாதைக்கான பணிகள் தொடங்கி நடக்கின்றன. ஏழை மக்களுக்காக பல்வேறு காப்பீடு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போதே குமரி பா.ஜ. தயாராகி விட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,688 வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போது தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், மேலிட பார்வையாளர் கணேசன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ. பொறுப்பாளர் ராஜகண்ணன், மாவட்ட பொருளாளர் உடையார், நிர்வாகிகள் தர்மராஜ், தேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...