×

நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகை,ஆக.14: நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க செப்.30ம் தேதி கடைசி நாளாகும்.நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜைன மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும், 2018-19ம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ம் வகுப்பு, ஐ.டி.ஐ., ஐ.டி.சி., தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளன.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.scholarsships.gov.in  என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2018-19ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 3 வகையான கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ், 1 லட்சத்து 33 ஆயிரத்து 404 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக்கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை இணையத்தளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமான சான்றிதழை, வருவாய் தாசில்தாரிடமிருந்து மட்டுமே பெற்று கல்வி நிலையத்தில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். மதம், சாதிக்கான சான்றிதழை வருவாய்த்துறை தாசில்தாரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். அல்லது சுய சான்றொப்பமிடப்பட்ட ரூ.10 நீதிமன்றம் சாரா முத்திரைத் தாள் உறுதிமொழி படிவத்திலும், இருப்பிட, உறைவிட சான்றிதழ் ஆகியவற்றை கல்வி நிலையத்தில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையத்தளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை மிகுந்த கவனத்துடன் நிரப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ முடியாது. மாணவ, மாணவிகளின் ஆதார் எண்களின் விவரம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கு இணையத்தளத்தால் பகிரப்பட மாட்டாது- கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து ஆன்லைன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள், இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள் http://www.bcmbcmu.tn.gov.in\\welfschemes schemes என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறும்படி கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்