×

விபத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்குவதில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை தாமதம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் உறவினர்கள் அவதி

அறந்தாங்கி, ஆக. 14: விபத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தாமதம் ஏற்படுவதால், நலத்திட்ட உதவிக்கு விண்ணப்பிக்க முடியாமல் உறவினர்கள் அவதிப்படுகின்றனர். இயற்கைக்கு மாறாக யாராவது விபத்தில் இறந்து விட்டாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாக அறந்தாங்கி நகர எல்லைக்குள் விபத்தில் சிக்கியவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வந்த பிறகு இறந்து விட்டால், அவரது இறப்பு குறித்த தகவல் மருத்துவமனை நிர்வாகத்தால் அறந்தாங்கி நகராட்சிக்கு தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து அவரது இறப்பு நகராட்சி இறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

ஆனால் விபத்தில் சிக்கியவரோ, தற்கொலைக்கு முயற்சிப்பவரோ நகராட்சி எல்லைக்கு வரும் முன்பே இறந்து விட்டால், இறந்த எல்லைக்குள் வரும் கிராம நிர்வாக அலுவலர் பதிவு செய்து, இறந்தவரின் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். அந்த இறப்பு சான்றிதழை வைத்து, இறந்தவரின் குடும்பத்தினர் வாரிசு சான்றிதழ் பெற முடியும். மேலும் உழவர் அட்டை, காப்பீட்டு தொகை, விபத்து இழப்புக்கான வழக்குப்பதிவு போன்றவற்றை செய்து அந்த குடும்பத்திற்கான நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இவ்வாறு கிராம பகுதிகளில் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலரிடம் காவல்துறை முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை பெறவும், விபத்து சம்பந்தமாக வழக்கு தொடுக்கவும் குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தற்போது குறைந்தது 15 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை ஆகிறது.

 இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: எங்களது உறவினர் ஒருவர் இறந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாகியும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து பிரேதப் பரிசோதனை அறிக்கை தரவில்லை. இதனால் நாங்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகிறோம். இறப்பு சான்றிதழ் பெற முடியாததால், எல்ஐசி காப்பீட்டு தொகை பெற முடியாமலும், உழவர் பாதுகாப்பு திட்ட உதவிக்கு விண்ணப்பிக்க முடியாமலும், விபத்து காப்பீட்டு தொகை பெற வழக்கு தொடுக்க முடியாத நிலையிலும் உள்ளோம். தற்போதுள்ள நிலையில் அனைத்து நவீன வசதிகளும் வந்து விட்டதால் அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறிக்கை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சம் ஒருவாரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு