×

காவிரி கடைமடை அறந்தாங்கி நாகுடி பகுதி ஆற்றில் தண்ணீர் திருட்டு

அறந்தாங்கி, ஆக. 14: நாகுடி கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும் கல்லணைக் கால்வாய் ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் திருடப்படுவதால், கடைமடை பகுதிக்கு தண்ணீர; செல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே ஆயில் இன்ஜின்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கியை அடுத் நாகுடி கடைமடை பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 2 முறை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஆனால் கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டதால் நாகுடி கடைமடை பகுதிக்கு வெறும் 90 கனஅடியே தண்ணீர் வந்தது.  

இந்நிலையில் மேற்பனைக்காடு தலைப்பில் இருந்து வல்லவாரி, ஆயிங்குடி, அரசர்குளம், மன்னகுடி உள்ளிட்ட பகுதிகளில் கல்லணைக் கால்வாயில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயில் இன்ஜின்கள் வைத்து ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, விதிகளுக்கு புறம்பாக தென்னை, வாழை மற்றும் காய்கறி பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. இதனால் நாகுடிக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரில் சுமார் 40 சதவீத தண்ணீர் திருடப்படுகிறது.
நாகுடி கடைமடை பகுதியில் உள்ள 110 ஏரிகளில் ஒரு ஏரியில் கூட தற்போது 10 சதவீதம் கூட தண்ணீர் இல்லாத நிலையில் நேற்று(திங்கள்கிழமை) காலை கல்லணைக் கால்வாயில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று இரவு நாகுடி பகுதிக்கு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மேற்பனைக்காடு தலைப்பில் இருந்து மன்னகுடி வரை கல்லணைக்கால்வாயில் வைக்கப்பட்டுள்ள ஆயில் இன்ஜின்கள் மூலம் சுமார் 200 கனஅடி வரை தண்ணீர் திருடப்படும் நிலை உள்ளது. இதனால் நாகுடி கடைமடை பகுதிக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்காது. இதனால் இந்த முறையும் பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலையே ஏற்படும்.

இது குறித்து நாகுடி கடைமடைப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகளின் நிலையை உணர்ந்து தற்போது கல்லணைக் கால்வாயில் நாகுடி கடைமடை பகுதிக்கு 300 கனஅடி தண்ணீர் வழங்குவதற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகுடி கடைமடை பகுதிக்கு வரும் தண்ணீரை ஆயில் இன்ஜின் வைத்து, திருடி தென்னை மரங்களுக்கு பாய்ச்சுவதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட ஆயில் இன்ஜின்கள் கல்லணைக்கால்வாயில் வைக்கப்பட்டுள்ளது. வரும் தண்ணீரை இன்ஜின் மூலம் உறிஞ்சினால், நாகுடி தலைப்பிற்கு வெறும் 150 முதல் 200 கனஅடி தண்ணீரே கிடைக்கும் இதனால் இப்பகுதியில் உள்ள 110 ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆற்றில் வைக்கப்பட்டுள்ள ஆயில் இன்ஜின்களை அகற்ற வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...