×

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் நாளை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

புதுக்கோட்டை, ஆக. 14: காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நாளை சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட அனைத்து விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடலில் வீணாக கலந்து வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடந்து பல ஆண்டுகளாக வறட்சி நீடித்து வருகிறது. இதனால் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் இப்படி வெள்ளம் ஏற்படும் போது உபரி நீர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு  பயன்பெறும். எனவே இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் கரூர் மாவட்டம் மாயனூரில் கதவணை அமைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வந்த அரசுகள் அதனை கிடப்பில் போட்டன. இந்நிலையில் தற்போது காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து உபரிநீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் தற்போது புதுக்கோட்டை மாவட்ட விசாயிகள் மத்தியில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்ற உள்ளது. இந்த கூட்டங்களில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி தீர்மானம் நிரைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி கூறியதாவது: நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளோம். மத்திய ,மாநில அரசுகள் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வராமல் செலவு தொகையை காரணம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்க இருக்கும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் காவிரி, வைகை, குண்டாறு, இணைப்புத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றார். மக்கள் நீதி மய்யம்: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்சுதாகர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நாளை நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் இதுவரை நடந்த வரவு, செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களையும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கூட்டத்தில் மக்கள் வைக்கும் அனைத்து தீர்மானங்களையும் பதிவு செய்ய வேண்டும். தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். தீர்மான நகல் கேட்பவர்களுக்கு தாமதமின்றி தீர்மான நகல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரத்துவாரியை மறித்து சாலை: இதேபோல் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் சித்தனேந்தல் பகுதியை சேர்ந்த அருளாந்து என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள வரத்துவாரியை மறித்து சாலை அமைத்து உள்ளனர். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி, வரத்து வாரியை மறித்து சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். டாஸ்மாக்கை மூட கோரிக்கை: சித்தனேந்தல் பகுதியை சேர்ந்த முத்து என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 முறை மனுக்களை கொடுத்தும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக்கை திறக்க கோரிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் சுனையக்காடு, பரவாக்கோட்டை, மறமடக்கி, கிட்டங்காடு, திருநாளூர், சிலட்டூர், தாந்தாணி, குரும்பூர், கீழையூர் ஆகிய ஊராட்சிகளை சுற்றியுள்ள பொதுமக்கள் சார்பில் சக்திவேல் என்பவர் கொடுத்த மனுவில், சுனையக்காடு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை திறப்பதால், எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உரியவிலையில் மதுபானங்கள் கிடைக்கும். அரசு டாஸ்மாக் கடை இல்லாததால், நாங்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து சுனையக்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...