×

மேலக்களக்குடி வெண்ணாற்றில் கரை உடையும் அபாயம்

தஞ்சை, ஆக. 14: தஞ்சை மாவட்டம் மேலக்களக்குடி ஆத்தூர் கிராமம் வெண்ணாற்றில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரைகளை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர்  அணையில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேலான கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் 9,526 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலக்களக்குடி கிராமம் ஆத்தூர் வெண்ணாற்றில் தண்ணீரின் வரத்து அதிகமானதால் கரைகள் உடையும் அபாய நிலை ஏற்பட்டது. மேலும் கரையின் கீழ்பகுதி உள்வாங்கி வருவதால் மேலக்களக்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் வெண்ணாற்றின் கரையை கும்பகோணம் சப் கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டார்.

பின்னர் கரையை பலப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து கரையோரத்தை பலப்படுத்தும் பணியில் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அய்யம்பெருமாள், செயற்பொறியாளர் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தியநாதன் மற்றும் அனைத்து துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெண்ணாற்றில் 9,526 கனஅடி  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகமாக இருப்பதால் மேலக்களக்குடி ஆத்தூர் பகுதியில் சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையை உடைத்து கொண்டு செல்லும் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் பார்வையிட்டு உடனடியாக  நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக 10 டன் மரக்கம்புகள், 1,000 மூட்டை மணல் சாக்குகளை கொண்டு கரையை பலப்படுத்தும் பணி நடக்கிறது என்றார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முகம்மது அலி கூறுகையில், வெண்ணாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் அதிகமாக வந்ததால் கரை உடைந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பயிர்களும் பாழானது. அப்போதும் இதே பகுதியில் சுழல் ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கரைகள் உடைந்தது. தற்போது அதிகளவில் தண்ணீர் வருவதால் ஆற்றில் சுழல் ஏற்பட்டு வருகிறது என்றார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு