×

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்

குளித்தலை, ஆக.14: தேசிய ஊரக வேலை  உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க குளித்தலை தாலுகா மாநாடு கருங்கலாப்பள்ளி காந்தி நகரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். 7 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தாலுகா குழு அமைக்கப்பட்டது. தாலுகா தலைவராக செல்வம், செயலாளராக முருகேசன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் தங்கவேல், மகாலிங்கம், லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று வீட்டுமனை இல்லாத தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்து உடனே வீட்டுமனை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல் வழங்கி மானியத்தில் உரம் வழங்க வேண்டும். 58 வயதான ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி மாத ஓய்வூதியம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும். குளித்தலையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை 12ம் வகுப்பு வரை நீட்டித்து விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் அரசு பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா