×

அதிராம்பட்டினம் பகுதியில் வறட்சி நிலவுவதால் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் மனு

தஞ்சை, ஆக. 14: அதிராம்பட்டினம் பகுதியில் வறட்சி நிலவுவதால் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டு ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டுமென தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதிராம்பட்டினம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் அளித்த மனு: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை, மிலாரிக்காடு, நடுவிக்காடு, நரசிங்கபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் விவசாய பணிகள் முடங்கிபோய் உள்ளன. மேலும் நீர்மட்டமும் குறைந்துள்ளது. வரக்கூடிய காலங்களில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவும் அபாயம் உள்ளது. எனவே வறட்சியை போக்கி குடிநீருக்காக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதற்காக முறைவைக்காமல் ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் அருணாச்சலம் சார்பில் நிர்வாகிகள் அளித்த மனு: வரும் 15ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது, அது முறையாக நடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். 7 நாட்களுக்கு முன்னதாக கிராமசபை கூட்டத்துக்கு அழைப்பு விடுவது. கிராம நலன்கருதி மக்கள் வைக்கும் தீர்மானங்களை பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தீர்மானங்களை பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரது கையொப்பமும் பெறப்பட வேண்டும். தீர்மான நகல் கேட்கும் நபர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை டவுன்கரம்பையை சேர்ந்த செல்வம் அளித்த மனு: தஞ்சை மாநகராட்சியில் வார்டு 13ல் கடந்த 6 மாதங்களாக குடிநீர் சரியாக முறையாக வழங்கவில்லை. கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம்  இல்லை. மாநகராட்சியில் புகார் செய்தும் இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறும் பழுதடைந்துள்ளது. மேலும் கழிவுநீர் தொட்டி உடைந்து சாலையில் கழிவுநீர் செல்கிறது.

எனவே உடனடியாக குடிநீர் கிடைக்கவும் மற்றும் பாதாள சாக்கடையை சீர் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் திருவோணம் ஒன்றிய பொறுப்பாளர் ரங்கசாமி மற்றும் பொதுமக்கள் அளித்த மனு: ஒரத்தநாடு பணிகொண்டான்விடுதி ஊராட்சி மேலஊரணிபுரம், கீழஊரணிபுரத்துக்கு இடையில் கல்லணை கால்வாய் வாய்க்கால் செல்கிறது. இந்த கல்லணை கால்வாய் வாய்க்காலில் இருந்து பிரியும் அலிவலம் கிளை வாய்க்காலின் தென்புறக்கரையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியாக பள்ளி, கல்லூரிக்கும் செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனர். இந்த கடையை விரைந்து அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து