சின்னமநாயக்கன்பட்டியில் அள்ளப்படாத குப்பையால் சுகாதார கேடு

கரூர், ஆக. 14: கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக அள்ளப்படாத நிலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் இருந்து கந்தசாரப்பட்டி செல்லும் வழியில் சின்னமநாயக்கன்பட்டி பகுதி உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் இரண்டு இடங்களில் குப்பை தொட்டி வைத்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வீரணம்பாளையம் செல்லும் வழியில் சேர்த்துக் வைக்கப்பட்டுள்ள குப்பைகள் சில மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளதாக இந்த பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள இந்த குப்பைகள், காற்றின் காரணமாக, கிராம பகுதிகளுக்குள் பறந்து செல்வதாகவும், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் வகையில் அள்ளப்படாத நிலையில் உள்ள இந்த குப்பைகளை கூடுதலாக குப்பை தொட்டிகள் வைத்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.

× RELATED அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் 2வது நாளில் 2 பேர் வேட்புமனு தாக்கல்