×

கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு

திருச்சி, ஆக.14:  கரூர்- திருச்சி இடையே 64 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதை கைவிட வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணியிடம் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் சின்னத்துரை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக கூடுதல் மரங்கள் நட்டுபராமரிப்பதாக கொடுத்த வாக்குறுதிகள் விதிமுறைகள் இதுவரை பின்பற்றப்படவில்லை. கரூர் அரவக்குறிச்சி-பாளையம்-தோகைமலை, ராச்சாண்டார்திருமலை-அதவத்தூர்-பள்ளக்காடு-அல்லித்துறை-சோமரசம்பேட்டை வழியாக திருச்சியை இணைக்கும் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தி சாலை ஓரங்களில் பலன்தரும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு அக்கறை காட்டவில்லை.

கரூர்-திருச்சி பூர்வீகமான ராணிமங்கம்மாள் சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரதொடர்ந்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் தமிழக அரசு  கண்டுகொள்ளவில்லை. 2006ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2007ல் பணி துவங்கிய கூடலூர்-கரூர்-திருச்சி-தஞ்சை-திருவாரூர்-நாகை செல்லும் என்எச்.67 தேசிய அரைவட்ட சுற்றுச்சாலை திட்டம் அமைப்பதற்கு அந்தநல்லூர், ஜீயபுரம், கருப்பூர், குழுமணி, பேரூர், முள்ளிக்கரும்பூர், அதவத்தூர், தாயனூர் புங்கனூர், கே.கள்ளிக்குடி, பிராட்டியூர், கொத்தமங்கலம், பஞ்சப்பூர், கே.சாத்தனூர், ஓலையூர், சூரியூர், கும்பக்குடி, இலந்தப்பட்டி, பழங்கனாங்குடி, துவாக்குடி வழியாக தஞ்சை தேசிய சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு 13 பாசன ஏரிகள் அழிக்கப்பட்டது.

விவசாயிகள் சட்டப்போராட்டம் நடத்தியதால் உயர்மட்டப்பாலம் அமைத்து, சாலை பணியை துவக்கவும், இல்லாவிட்டால் ஏரிகளை தவிர்த்த சாலை திட்டத்தை வெளிப்பகுதியில் கொண்டு செல்லவும் மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 11 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.  எனவே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக துவக்கவேண்டும். கரூர்-திருச்சி இடையே  64 கிமீ. நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் . இல்லையென்றால் மக்கள் போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் தொடர்ந்து நடத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்னின்று செயல்படுவோம்’ என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு