பண்டுதக்காரன்புதூரில் அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் எழுப்பும் பணி

கரூர், ஆக. 14: கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள அங்கன்வாடி முன்பு இழுபறியில் நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கரூர் ஊராட்சி ஒன்றியம் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் பண்டுதகாரன்புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பிரதான சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வரும் இந்த அங்கன்வாடியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அங்கன்வாடியை சுற்றிலும் சுவர் எழுப்பும் வகையில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன், கருங்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படாத நிலையில், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலை நிலவி வருகிறது. மேலும், அங்கன்வாடி நுழைவு வாயிலிலேயே பள்ளம் இருப்பதாலும் ஆபத்தான சூழலிலேயே இங்கு குழந்தைகள் பயின்று செல்கின்றனர். பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பாதுகாப்பு கருதி ஏராளமான குழந்தைகள் அங்கன்வாடிக்கு வராமலேயே உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு அங்கன்வாடியை சுற்றிலும் நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணியை தாமதமின்றி செய்திட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

× RELATED குளத்துப்பாளையம் சாலையில்...