×

திருப்பைஞ்சீலி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

மண்ணச்சநல்லூர், ஆக.14:  திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் நேற்று ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் விசாலாட்சி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.  இத்தல இறைவனை வழிபட்டால் எம பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. அப்பர் சுவாமிகள் திருப்பைஞ்சீலியில் எழுந்தருளி உள்ள நீலிவனேஸ்வரரை தரிசிக்க திருப்பைஞ்சீலி நோக்கி சென்றபோது அவருக்கு களைப்பும், பசியும் ஏற்பட்டது. தன் பக்தர் ஒருவர் களைப்புற்று இருப்பதை உணர்ந்த நீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் வேடம் பூண்டு பசியை போக்க அப்பர் சுவாமிகளுக்கு கட்டமுது வழங்கினார்.

இதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கட்டமுது விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் கேடயம், சேஷ வாகனம், கிளி வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், யாளி வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மாலை 3.35 மணியளவில் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளில் வலம் வந்து தேர் நிலைக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு