×

ரூ.50ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்

குளித்தலை, ஆக.14: குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 35 ஆம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குளித்தலை வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாயவன் வரவேற்றார். செயலாளர் துரைசாமி, பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் சிருங்கேசன், துணைத்தலைவர் மகாமுனி, மாவட்ட பொதுசெயலாளர் சிவசங்கரன், ஓய்வுபெற்ற கருவூல அலுவலர் சிவசண்முகம், வட்ட தலைவர்கள் சக்திவேல், ராமசாமி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில தலைவர் கணேசசங்கர் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு வழங்கியது போல் 1.1.2016 முதல் செயல்முறைப்படுத்தப்படும் என எதிர்ப்பார்த்ததற்கு பதிலாக தமிழக அரசு 01.10.2017 முதல் நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிட்டுள்ளது. ஆகவே 1.1.2016 முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மத்தியஅரசு மருத்துவபடியாக மாதம் ஆயிரம் வழங்குவதை போல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்கள் மரணமடைந்தால் அவரது 65 வயது வரை முழு ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக 7 ஆண்டுகளுக்கு வழங்குவதை 10 ஆண்டுகளுக்கு உயர்த்தி வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 1.6.88 முதல் 31.12.95 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு முழுஅகவிலைப்படியை சேர்த்து ஓய்வூதியத்தை திருத்தி வழங்கக்கூடிய அரசாணை 363ஐ நிறைவேற்றித்தர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். குளித்தலைக்கு புதிய சார்நிலை கருவூல அலுவலகம் கட்டிடம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நல்லாசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்